காங்கிரஸில் இன்று இணையும் ஆந்திர முதல்வரின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா!
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா காங்கிரஸ் கட்சியில் இன்று இணையவுள்ளார்
ஒருங்கிணைந்த ஆந்திர முதல்வராக இருந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி மறைவையடுத்து, காங்கிரஸ் உடனான மோதல் காரணமாக, அவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டி, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் எனும் தனிக்கட்சியை ஆரம்பித்தார். ஆந்திர மாநிலத்தின் முதல்வராக இருக்கும் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா, தெலங்கானாவில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் கடந்த 2021ஆம் ஆண்டில் ஒய்.எஸ்.ஆர்.தெலங்கானா எனும் தனிக்கட்சியை ஆரம்பித்து அதன் தலைவராக செயல்பட்டு வருகிறார். ஆனால், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் யாரும் அவரது கட்சிக்கு இல்லை.
தெலங்கானா மாநில முதல்வராக இருந்த கே.சந்திரசேகர ராவை எதிர்த்து கடுமையாக அரசியல் செய்து வரும் ஒய்.எஸ்.ஷர்மிளா, தனது கட்சியை காங்கிரஸ் உடன் இணைக்கப் போவதாக சமீப நாட்களாக தகவல்கள் வெளியாகி வந்தன. தெலங்கானா மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக இந்த இணைப்பு நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு தனது ஆதரவை மட்டும் அவர் அளித்தார்.
இந்த நிலையில், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா காங்கிரஸ் கட்சியில் இன்று இணையவுள்ளார். அவரது கட்சியையும் காங்கிரஸ் உடன் இணைப்பார் என தெரிகிறது. இதற்காக நேற்று மாலையே அவர் டெல்லி சென்று விட்டார். தற்போது அவர் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் வந்துள்ளார்.
ராமர் கோயில் கட்டும்போது இதுதான் மிகப்பெரிய சவாலாக இருந்தது: நிருபேந்திர மிஸ்ரா தகவல்!
“கடந்த ஒரு வருடமாக ஷர்மிளாவுடன் காங்கிரஸ் கட்சி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது, முன்னதாக அவர் செப்டம்பர் மாதம் ஹைதராபாத்தில் நடைபெறும் பேரணியில் கலந்துகொள்ள திட்டமிட்டிருந்தார். ஆனால் பேச்சுவார்த்தையை சரியான நேரத்தில் முடிக்க முடியவில்லை.” என்று ஒரு மூத்த தலைவர் கூறியுள்ளார்.
ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தில் இரண்டு முறை முதல்வராக இருந்து கடந்த 2008ஆம் ஆண்டில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகளான ஒய்.எஸ்.ஷர்மிளாவின் வருகை மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஊக்கமளித்து தேர்தலில் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் செல்வாக்கை அறுவடை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.