ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சண்டையில் படுகாயமடைந்த ராணுவ மேஜர் வீரமரணம் அடைந்தார்.  

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் அனந்த்நாக் மாவட்டம் அச்சபல் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அப்பகுதிக்கு விரைந்த பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது திடீரென வீரர்களை நோக்கி தீவிரவாதிகள் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். 

நீண்ட நேரம் நீடித்த துப்பாக்கிச்சண்டையில் இரண்டு தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். 19-வது ராஷ்டரிய ரைபிள்ஸ் படைப்பிரிவை சேர்ந்த ராணுவ மேஜர், ஒரு உயரதிகாரி மற்றும் 2 வீரர்கள் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ராணுவ மேஜர் வீரமரணம் அடைந்தார். தொடர்ந்து அப்பகுதியில் துப்பாக்கிச்சண்டை நீடித்து வருகிறது.