அசாம் காங்கிரஸ் செயல் தலைவர் ராணா கோஸ்வாமி ராஜினாமா: பாஜகவில் இணைகிறார்!
அசாம் மாநில காங்கிரஸ் செயல் தலைவர் ராணா கோஸ்வாமி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்
மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவான், முன்னாள் எம்.பி., மிலிந்த் தியோரா போன்ற தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் விலகி பாஜகவில் இணைந்துள்ள நிலையில், அக்கட்சிக்கு அடுத்த அதிர்ச்சியாக அசாம் மாநில காங்கிரஸ் செயல் தலைவர் ராணா கோஸ்வாமி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காங்கிரஸ் ஆளும் இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்க காங்கிரஸ் மேலிடம் முயற்சித்து வருகிறது. இந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் அசாம் மாநில காங்கிரஸ் செயல் தலைவர் ராணா கோஸ்வாமி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அசாம் மாநிலம் ஜோர்ஹாட் தொகுதியின் முன்னாள் எம்.எ.ஏ.வான ராணா கோஸ்வாமி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் (அமைப்பு) கே.சி.வேணுகோபாலுக்கு எழுதியுள்ள ராஜினாமா கடிதத்தில், அசாம் மாநில காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவர் பதவியிலிருந்தும், இந்திய தேசிய காங்கிரஸின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் தான் ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார்.
தற்போது டெல்லியில் இருக்கும் ராணா கோஸ்வாமி, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஆகியோரை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அசாமில் இருந்து மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை முடிவு செய்வதற்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை இடங்கள் வழங்கப்பட வேண்டும் என்பது குறித்தும் கட்சி மேலிடத்திடன் ஆலோசிக்க மூத்த நிர்வாகிகள் அடங்கிய அசாம் மாநில பாஜக குழுவும் டெல்லியில்தான் உள்ளது.
அசாமில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரைக்கான தயாரிப்புகளில் ராணா கோஸ்வாமி மும்முரமாக ஈடுபட்டிருந்தார். நியாய யாத்திரையின் போது பதிவு செய்யப்பட்ட வழக்கு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் காவல்துறையால் விசாரிக்கப்பட்டார். இருப்பினும், பல்வேறு அரசியல் காரணங்களுக்காக காங்கிரஸ் கட்சியில் இருந்து ராணா கோஸ்வாமி விலகியுள்ளார்.
முன்னதாக, இந்த மாத தொடக்கத்தில் அசாம் மாநில காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த எம்.எல்.ஏ. கமலாக்யா டே புர்காயஸ்தா, பாஜக அரசுக்கு தனது ஆதரவை வழங்கினார். அவருடன் இணைந்து காங்கிரஸ் எம்எல்ஏ பசந்தா தாஸும் பாஜகவுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். அவர்களைத் தவிர்த்து, 126 உறுப்பினர்களைக் கொண்ட அசாம் மாநில சட்டப்பேரவையில் காங்கிரசுக்கு இப்போது 23 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர்.
ராஜினாமா செய்யவில்லை: இமாச்சலப்பிரதேச முதல்வர் மறுப்பு!
தற்போது ராணா கோஸ்வாமியின் ராஜினாமா அம்மாநிலத்தில் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் அசாமில் உள்ள மொத்தம் 14 இடங்களில் பாஜக 9 இடங்களில் வெற்றி பெற்றது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் எம்எல்ஏவும், அசாமின் எதிர்க்கட்சித் தலைவருமான தேபப்ரதா சைகியா கூறுகையில், “ராணா கோஸ்வாமி மிகவும் மூத்த தலைவர். கட்சியில் அடிமட்டத்தில் இருந்து வளர்ந்தவர். இரண்டு முறை எம்.எல்.ஏ.வாகவும் பணியாற்றியுள்ளார். தேசிய அளவில், ஒரு அர்ப்பணிப்புள்ள கட்சி என்ற முறையில் அவருக்கு காங்கிரஸ் தன்னால் இயன்ற அனைத்தையும் செய்து கொடுத்துள்ளது என்று நினைக்கிறேன். ஒருவேளை அவர் அதிருப்தி அடைந்திருக்க வேண்டும் அல்லது நமக்கு தெரியாத வேறு சில விஷயங்கள் அவர் ராஜினாமாவுக்கு காரணமாக இருக்கலாம்.” என்றார்.
கட்சியை விட்டு வெளியேறியதற்கான காரணத்தை அவர் தெரிவிக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். அவர் சொன்னால் அவரது குறைகளை நிறைவேற்றி கட்சியை வளர்க்கலாம். எதிர்க்கட்சி இல்லாத இந்தியாவை அனுமதிக்க முடியாது எனவும் அவர் கூறினார்.
ராணா கோஸ்வாமி, பாஜகவில் இணைவது குறித்த கேள்விக்கு பதிலளித்த முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, அத்தகைய தகவல்கள் எதுவும் இல்லை என்று கூறி மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனால், ராணா கோஸ்வாமி காங்கிரஸின் சக்திவாய்ந்த தலைவர். அவர் பாஜகவில் இணைந்தால், நான் அதை வரவேற்பேன் என்றும் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.