மகாராஷ்டிராவின் அமராவதியில், திருமண மேடையில் மணமகன் கத்தியால் குத்தப்பட்டார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தப்பியோடிய குற்றவாளியை திருமண விழாவைப் படம்பிடித்த டிரோன் கேமரா சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் பின்தொடர்ந்து பதிவு செய்துள்ளது.

மகாராஷ்டிராவின் அமராவதியில் நடந்த திருமண விழா மேடையிலேயே பதற வைக்கும் குற்றச் சம்பவம் நடந்துள்ளது. மணமகன் மேடையில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில், விழாவைப் படம்பிடிக்கப் வந்திருந்த டிரோன் கேமரா ஆபரேட்டர் தப்பியோடிய குற்றவாளியையும் அவரது கூட்டாளியையும் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் வரை பின்தொடர்ந்து பதிவு செய்துள்ளார்.

மணமேடையில் கத்திக்குத்து

கடந்த திங்கட்கிழமை இரவு 9:30 மணியளவில் பத்னேரா சாலையில் உள்ள சாஹில் லான் என்ற இடத்தில் 22 வயதான சுஜல் ராம் சமுத்ரா என்பவரின் திருமண விழா நடைபெற்றது.

அப்போது, ரகோ ஜிதேந்திர பக்சி என அடையாளம் காணப்பட்ட நபர், மேடைக்கு வந்து மணமகன் சுஜலைச் சந்தித்தார். பின்னர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மணமகனின் தொடை மற்றும் முழங்கால் பகுதிகளில் மூன்று முறை சரமாரியாகக் குத்திவிட்டு அங்கிருந்துத் தப்பி ஓடினார்.

படுகாயம் அடைந்த மணமகன் சுஜல் உடனடியாக அமராவதியில் உள்ள RIMS மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவருக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டிருந்தாலும், அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Scroll to load tweet…

குற்றவாளியை சேஸ் செய்த டிரோன் கேமரா

திருமண நிகழ்வைப் பதிவு செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட டிரோன் கேமரா, எதிர்பாராதவிதமாக இந்தக் கொடூரக் குற்றத்தின் முக்கியமான ஆதாரமாக மாறியுள்ளது.

கத்திக்குத்துக்குப் பிறகு விருந்தினர்களிடையே பதற்றம் ஏற்பட்டபோது, அங்கிருந்த டிரோன் கேமரா ஆப்ரேட்டர், கேமராவைத் தொடர்ந்து பதிவு செய்ய வைத்து, தப்பியோடிய குற்றவாளியைப் பின்தொடர்ந்தார்.

ஆரஞ்சு நிற ஹூடி (Hoodie) அணிந்திருந்த குற்றவாளி, திருமண மண்டபத்தில் இருந்து வெளியே ஓடி, அங்கே தயாராக இருந்த ஒரு பைக்கில் ஏறினார். அவருடன் கருப்பு உடை அணிந்த மற்றொரு நபரும் சேர்ந்துகொண்டார். மணமகனின் உறவினர் ஒருவர் அவர்களைப் பிடிக்க முயன்றபோதிலும், இருவரும் பைக்கில் வேகமாகத் தப்பிச் சென்றனர்.

டிரோன் கேமரா இந்த இருவரையும் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் வரை துரத்தி, அவர்களின் தப்பிக்கும் பாதையையும், குற்றவாளியின் முகத்தையும் தெளிவாகப் பதிவு செய்துள்ளது.

விசாரணைக்கு உதவும் வீடியோ

"டிரோன் ஆப்ரேட்டரின் விழிப்புணர்வு எங்களுக்கு மிகவும் உதவியாக உள்ளது. குற்றம் சாட்டப்பட்டவரை அடையாளம் காணவும், அவரைக் கண்டுபிடித்து கைது செய்யவும் இந்த விடியோ பெரிதும் உதவும்," என்றும் என்று போலீசார் கூறுகின்றனர்.

காவல்துறையினர் இந்த டிரோன் கேமரா காட்சிகளைப் பெற்று, வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ ஆதாரத்தைக் கொண்டு குற்றவாளியின் நடமாட்டத்தைக் கண்காணித்து வரும் காவல்துறை, விரைவில் அவர் கைது செய்யப்படுவார் என்று தெரிவித்துள்ளது.

ஆரம்பக்கட்ட விசாரணையின்படி, திருமண விழாவில் நடந்த டி.ஜே. நடனத்தின்போது ஏற்பட்ட சிறு தகராறே இந்தக் கொலை முயற்சிக்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது. நடனமாடிக்கொண்டிருந்தபோது மேடைக்கு வந்த குற்றவாளி மணமகனைக் கத்தியால் குத்திவிட்டு ஓடிவிட்டார்.