ஊசி முனை அளவு நிலத்தைக்கூட ஆக்கிரமிக்க விடமாட்டோம்: சீனாவுக்கு அமித் ஷா கண்டனம்
அருணாச்சலப் பிரதேசத்தில் ஊசி முனை அளவு நிலத்தைக்கூட ஆக்கிரமிக்க முடியாது என்ற அமித் ஷாவின் பேச்சு சீனாவைக் கோபம் அடையச் செய்துள்ளது.
திங்கட்கிழமை அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அந்த மாநிலத்தில் அதிகரித்துவரும் சீனாவின் அத்துமீறல் குறித்து பேசியுள்ளார். இந்தியா தனது நிலப்பரப்பில் ஒரு அங்குலத்தை கூட யாரும் ஆக்கிரமிக்க அனுமதிக்காது என்று அமித் ஷா தெரிவித்திருக்கிறார். இதற்கு கண்டிக்கும் சீன அரசு தரப்பு, அமித் ஷாவின் வருகையை எல்லைப் பகுதிகளில் அமைதிக்கு தீங்கு விளைவிக்கும் செயல் என்று விமர்சித்துள்ளது.
இரண்டு நாள் பயணமாக திங்கட்கிழமை அருணாச்சலப் பிரதேசம் சென்ற அமித் ஷா அஞ்சாவ் மாவட்டத்தில் உள்ள இந்திய சீன எல்லைப் பகுதிக்கு அருகில் உள்ள இந்தியாவின் முதல் கிராமமான கிபிதூவில் 'Vibrant Villages Programme' என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளார். அப்போது பேசிய அமித் ஷா, “நமது ராணுவம் மற்றும் இந்திய திபெத்திய எல்லைக்காவல் படை வீரர்களின் துணிச்சலால், நம் நாட்டின் எல்லைகளை யாராலும் உரிமை கோர முடியாது. நம் நாட்டு நிலத்தை யார் வேண்டுமானாலும் அபகரிக்கும் காலம் போய்விட்டது. இப்போது, ஊசி முனை அளவு நிலத்தைகூட யாரும் ஆக்கிரமிக்க முடியாது.” என்று கூறினார்.
மேலும், “எங்கள் கொள்கை தெளிவாக உள்ளது. நாங்கள் அனைவருடனும் நிம்மதியாக வாழ விரும்புகிறோம் ஆனால் ஒரு அங்குலம் கூட எங்கள் நிலத்தை ஆக்கிரமிக்க அனுமதிக்கமாட்டோம்” என்றும் அவர் தெரிவித்தார். அமித் ஷாவின் இந்தப் பேச்சுக்கு சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் பதில் அளித்துள்ளார்.
பெய்ஜிங்கில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், “ஜாங்னான் சீனாவின் ஒரு பகுதி. ஜாங்னானில் இந்திய அதிகாரியின் செயல்பாடு சீனாவின் பிராந்திய இறையாண்மையை மீறுவதாக உள்ளது. இது எல்லைப் பகுதிகளில் அமைதிக்கு உகந்ததாகவும் இல்லை. இதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்” என்றார். ஜாங்னான் என்பது அருணாச்சலப் பிரதேசத்திற்கு சீனா வைத்துள்ள பெயர்.
தெற்கு திபெத்தின் ஒரு பகுதியாக அருணாச்சலப் பிரதேசத்தின் மீது உரிமை கோரும் சீனா, தனது நிலைப்பாட்டை வலுப்படுத்ததும் விதமாக அப்பகுதியில் உள்ள பல இடங்களுக்கு சீனப் பெயர்களை அறிவித்து வருகிறது. அண்மையில், அருணாச்சலத்தில் உள்ள 11 இடங்களின் பெயர்ப் பட்டியலை சீனா வெளியிட்டது. இதனைக் கண்டித்த இந்திய வெளியுறவுத்துறை சீனா சூட்டிய பெயர்கள் புதிதாகக் 'கண்டுபிடிக்கப்பட்ட பெயர்கள்' என்று சாடியது.
இந்தச் சூழலில் அருணாச்சலப் பிரதேசத்திற்குச் சென்று அமித் ஷா பேசியது இருநாடுகளுக்கு மத்தியில் மோதல் போக்கை அதிகரிக்க வைப்பதாக உள்ளது. அமித் ஷா பேசிய கிபித்தூ கிராமம் இந்திய சீன எல்லைக் கோட்டிற்குத் தெற்கே 15 கிமீ தொலைவிலும், இந்தியா-சீனா-மியான்மர் எல்லைக்கு மேற்கே 40 கிமீ தொலைவிலும் உள்ளது. இதுவே இந்தியாவின் கடைசி கிராமமாகக் கருதப்படுகிறது.
சாம்ராஜ்நகர் சபிக்கப்பட்ட பகுதியா? அரசியல்வாதிகள் அங்கு செல்வதைத் தவிர்ப்பது ஏன்?