பாஜக தேசிய தலைவர் பொறுப்பில் இருந்து விலகும் பேச்சுக்கே இடமில்லை என்று அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா கூறியுள்ளார். தலைவர் பொறுப்பில் மிகுந்த மகிழ்ச்சியுடனும், முழு மனதுடனும் செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தேர்வு செய்யப்படவுள்ளார். அவர் தேர்வு செய்யப்படுவது உறுதியாகி விட்ட நிலையில், உத்தரப்பிரதேசத்தில் அமித் ஷா 3 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.

அப்போது, உட்கட்சி விவகாரங்கள், கட்சிப் பணிகள், கட்சியின் வளர்ச்சி உள்ளிட்டவை தொடர்பாக பல்வேறு கூட்டங்களில் அவர் கலந்து கொண்டார். ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் பலரையும் சந்தித்து அமித் ஷா ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில், நேற்று அவர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது, மாநிலங்களவை எம்.பி. ஆன பின்னர் தலைவர் பொறுப்பில் இருந்து அமித்ஷா நீக்கப்படுவாரா என்பது உள்ளிட்ட கேள்விகளை நிருபர்கள் கேட்டனர். அவற்றுக்கு அமித் ஷா அளித்த பதில் வருமாறு:-

பாஜகவின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகும் பேச்சுக்கே இடம் இல்லை. கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் எனக்கு பொறுப்புகள் உள்ளன. நான் மிகவும் மகிழ்ச்சியாகவும், அர்ப்பணிப்புடனும் எனது பணிகளை செய்து வருகிறேன். நாட்டில் வளர்ச்சி திட்டங்களை மோடி ஏற்படுத்தி வருகிறார். 13 மாநிலங்களில் பாஜக ஆட்சி செய்து வருகிறது.

2014 மக்களவை தேர்தலில் பெற்ற வெற்றியைக் காட்டிலும் 2019 மக்களவை தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றியை பெறும். நாட்டின் மிகச்சிறந்த பிரதமராக மோடி செயல்பட்டு வருகிறார்.

இதற்கு முன்பு பிரதமர் பொறுப்பில் இருந்தவர்கள் குடும்ப அரசியல், சாதி மற்றும் குறிப்பிட்ட சிலரை திருப்திபடுத்தும் அரசியலை செய்து வந்தனர். மன்மோகன் சிங்கின் தவறான கொள்கைகளால் அரசு கடுமையாக பாதிக்கப்பட்டது.

அந்த நேரத்தில் ஒவ்வொரு துறை அமைச்சரும் தங்களை பிரதமராக கருதிக்கொண்டு செயல்பட்டனர். மன்மோகன்சிங்கை ஒரு பிரதமர் என்று யாருமே எண்ணவில்லை.

முன்பிருந்த அரசு போல் இல்லாமல் மோடி அரசு கடந்த 3 ஆண்டுகளில் 50 முக்கிய திட்டங்களை கொண்டு வந்துள்ளது. எந்தவொரு ஊழல் புகாரும் மத்திய அரசு மீது ஏற்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.