அயோத்தி ராமர் கோயில் திறப்பு: அரைநாள் விடுப்பை திரும்பப் பெற்ற டெல்லி எய்ம்ஸ்!
அயோத்தி ராமர் கோயில் திறப்பையொட்டி, விடுக்கப்பட்ட அரை நாள் விடுமுறையை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை திரும்பப் பெற்றுள்ளது
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயில் வருகிற 22ஆம் தேதி (நாளை) திறக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படவுள்ளது. அன்றைய தினமே குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ளவுள்ளார்.
ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, நாடே விழாக்கோலம் பூண்டுள்ளது. இதனை ஒரு அரசு விழா போன்று மத்திய பாஜக அரசு செய்து வருகிறது. அந்த வகையில், அயோத்தி ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு, அன்றைய தினம் அரை நாள் விடுப்பு வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஊழியர்களிடமிருந்து வந்த அதிகப்படியான கோரிக்கை காரணமாக, மதியம் 2.30 மணி வரை அரை நாள் விடுமுறை அளிக்கும் முடிவை அரசு எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, ரிலையன்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் ஜனவரி 22ஆம் தேதியன்று, தங்களது ஊழியர்களுக்கு விடுமுறை அளித்துள்ளன. பங்குசந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் வரும் 22ஆம் தேதி அரசு விடுமுறை விடப்படுவதாக முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். வேறு சில மாநிலங்களும் அரசு விடுமுறை அளித்துள்ளன.
அயோத்திக்கும் ராமேஸ்வரம் தனுஷ்கோடி அரிச்சல் முனைக்கும் என்ன தொடர்பு?
இதனிடையே, அயோத்தி ராமர் கோயில் திறப்பையொட்டி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அரை நாள் விடுமுறை விடப்பட்டது. இதற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். சாதாரண கோயில் விழாவுக்கு மருத்துவமனையை மூடினால் நோயாளிகளின் நிலை என்ன ஆவது என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.
இந்த நிலையில், அயோத்தி ராமர் கோயில் திறப்பையொட்டி, விடுக்கப்பட்ட அரை நாள் விடுமுறையை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை திரும்பப் பெற்றுள்ளது. அப்பாயிண்ட்மெண்ட் பெற்றவர்களுக்கு புறநோயாளிகள் பிரிவு வழக்கம் போல செயல்படும் எனவும், அவசரகால மருத்துவ சேவைகளும் செயல்படும் எனவும் டெல்லி எய்ம்ஸ் நிர்வாக அலுவலர் ராஜேஷ் குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.