பஞ்சாப் மாநில முதல்வர் பிரகாஷ் சிங் பாதலுடன் நான் சண்டையிட வேண்டும் என்று முதலில் கூறிவிட்டு, இப்போது அவர் வெற்றிக்காக துணை போகிறேன் என்று அரவிந்த் கெஜ்ரிவால் முட்டாள் தனமாகப் பேசுகிறார் என்று பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் அமரீந்தர் சிங் கடுமையாக தாக்கிப் பேசியுள்ளார்.

தேர்தல்

177 சட்டசபைப் பேரவைத் தொகுதிகள் கொண்ட பஞ்சாப் மாநிலத்துக்கு பிப்ரவரி 4-ந்தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல், பிரசாரம் என மாநிலம் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

காங்கிரஸ் பலம்

பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகிய முன்னாள் எம்.பி. நவ்ஜோத் சிங் சித்து சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இவரின் வருகை காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.

இந்நிலையில், பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் அமரீந்தர்சிங் பாட்டியாலாவில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-

முட்டாள்தனம்

ஆம்ஆத்மி கட்சியின் கெஜ்ரிவாலின் பேச்சு முன்னுக்கு பின் முரணாக இருக்கிறது. முதலில் முதல்வர் பிரகாஷ்சிங் பாதலுடன் நான் சண்டையிட வேண்டும் என்று கூறிவிட்டு, இப்போது நான் அவரின் வெற்றிக்காக அவரின் சொந்த தொகுதியான லம்பியில் போட்டியிடாமல் வேறு தொகுதியில் போட்டியிட்டு அவரை வெற்றிபெற வைக்க முயல்கிறேன் என்று முட்டாள் தனமாகப் பேசுகிறார். கெஜ்ரிவால் அவரின் நிலையை உணர்ந்து, அவர் பேச வேண்டும்.

சீரழித்தனர்

பஞ்சாப் மக்களை பாதுக்காக்க நான் லம்பி தொகுதியில் போட்டியிடக் கூறி என்னைக் தொண்டர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். லம்பி என்பது கர்மபூமி. முதல்வர் பாதல் குடும்பத்தினர் செய்யும் அக்கிரமங்களுக்கும், அநியாங்களுக்கும் பாடம் கற்றுக்கொடுக்க அங்கு நான் போட்டியிடுவேன். கடந்த 10 ஆண்டுகளாக பஞ்சாப் மாநிலத்தை சீரழித்து விட்டார்கள்.

தலைமையிடம் முடிவு

இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இப்போது வரை கூட்டணி குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. அந்த முடிவை கட்சித் தலைமைதான் முடிவு செய்யும். அதேபோல, நாங்கள் வெற்றி பெற்றால், முதல்வராக யார் வர வேண்டும் என்பதையும் கட்சியின் தலைமைதான் முடிவு செய்யும். இந்த தேர்தலில் பெரும்பான்மையுடன் நாங்கள் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

பிரச்சினை இல்லை

எனக்கும், புதிதாக கட்சியில் இணைந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங் சித்துவுக்கும் எந்த மனக்கசப்பும் கிடையாது. எனக்கும்சித்துவுக்கும் பாட்டியாலா நகரை அடிப்படையாக வைத்து ஆழ்ந்த தொடர்பு இருக்கிறது. சிறுவயதில் இருந்தும், கிரிக்கெட் விளையாட காலத்தில் இருந்தும் சித்துவை நன்கு தெரியும். அவரின் குடும்பத்தினரும் எனக்கு நன்கு பழக்கமானவர்கள். எனக்கு அவருக்கும் எந்த விதமான சண்டையும் இல்லை. அவர் காங்கிரஸ் கட்சியில் இணையும் நாள் அன்று மாநிலத்தில் தீவிர பிரசாரத்தில் நான் ஈடுபட்டு இருந்தேன்.

உறுதிகொடுக்கவில்லை

நாங்கள் தேர்தலில் வெற்றி பெற்றால், சித்துவுக்கு எந்த முக்கிய பொறுப்பும் கொடுப்போம் என்று எந்த பேச்சும் நடத்தவில்லை. கட்சியும் அவரிடம் நடத்தவில்லை. இந்த தேர்தலில் சித்துவின் பிரசாரம் முக்கிய துருப்புச்சீட்டாக இருக்கும். அவர் 19-ந்தேதியில் இருந்து பிரசாரத்தை தொடங்குகிறார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.