அமர்நாத் தாக்குதலில் தொடர்புடைய 3 முக்கிய குற்றவாளிகளை கைது செய்துள்ளதாக ஜம்மு – காஷ்மீர் மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.

அமர்நாத் குகைக் கோயிலில் உள்ள பனி லிங்கத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் தரிசித்து வருகின்றனர். ஜூன் 29-ம் தேதி தொடங் கிய  இந்த அமர்நாத் யாத்திரை வரும் ஆகஸ்ட் 7-ம் தேதியுடன் முடிவடைகிறது.

இந்நிலையில் கடந்த மாதம் 10-ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஆனந்த்நாக் மாவட்டம் அருகே பஸ்ஸில் பயணித்துக் கொண்டு இருந்த அமர்நாத் யாத்திரிகர்கள் மீது ஆயுதங்கள் தாங்கிய தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 7 பக்தர்கள்  பலியாயினர்.  30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக அம்மாநில போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜம்மு-காஷ்மீர் மாநில ஐ.ஜி.பி. முனீர் அகமது, பாகிஸ்தான் மற்றும் காஷ்மீரைச் சேர்ந்த 4 லஷ்கர் தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்திருப்பதாகக் கூறினார்.

அவர்களுக்கு தளவாடங்கள், வழிகாட்டுதல் உள்ளிட்ட உதவிகளை வழங்கிய முக்கிய குற்றவாளிகள் மூன்று பேர் கைது செய்யபட்டுள்ளதாகவும் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் முனீர் அகமது தெரிவித்தார்.