பஞ்சாப் மாநிலத்தில் 10 ஆண்டுகளுக்குப் பின் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இதையடுத்து மாநிலத்தின் 26-வது முதல்வராக கேப்டன்அர்மிந்தர் சிங் (வயது75) நேற்று பதவி ஏற்றார்.

அவருடன் முன்னாள் கிரிக்கெட் வீரர்  நவ்ஜோத் சிங் சித்து உள்ளிட்ட  9 எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர்.

காங்.வெற்றி

117 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப் மாநிலத்தில், 77 தொகுதிகளைக் கைப்பற்றிய காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் 10 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சியைக் கைப்பற்றியது. சிரோமணி அகாலிதளம்,  பாரதிய ஜனதா கூட்டணி 18 இடங்களையும், ஆம் ஆத்மி கட்சி 20 இடங்களையும் கைப்பற்றின.

அழைப்பு

இதைத் தொடர்ந்து, முதல்வராக இருந்த அகாலிதளம் கட்சியின் தலைவர்பிரகாஷ் சிங் பாதல் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். புதிய ஆட்சி அமைக்க ஆளுநர் வி.பி.சிங் பட்நூர், காங்கிரஸ் தலைவர் கேப்டன்அமரிந்தசிங்குக்கு அழைப்பு விடுத்தார்.

எளிமையான நிகழ்ச்சி

இதையடுத்து,  மாநிலத்தின் 26-வது முதல்வராக கேப்டன் அமரிந்தர்சிங் நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். சண்டிகராரில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்பு நிகழ்ச்சி மிக எளிமையாக நடந்தது. ஆளுநர் வி.பி.சிங் பட்நூர், கேப்டன்அமரிந்தர் சிங்குக்கு முதல்வராக பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

துணை முதல்வர் இல்லை

இவருடன் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து உள்ளிட்ட 9 எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். துணை முதல்வராக சித்து பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு அமைச்சர் பதவியே கொடுக்கப்பட்டது. மேலும், இரு பெண் எம்.எல்.ஏ.க்களும்அமைச்சர்களாகப் பதவி ஏற்றனர்.

அமைச்சர்கள்

நவ்ஜோத் சிங் சித்து, பிரஹாம் மோஹிந்த்ரா, மன்பிரீத் சிங் பாதல்(முன்னாள் முதல்வரின் பாதலின் உறவினர்), சாதுசிங் தரம்கோட், திரிப்த் ரஜிந்தர் சிங் பஜ்வா, ராணா குர்ஜித் சிங் சோதி, மற்றும் சரண்ஜித் சிங் சான் ஆகியோரும், அருணா சவுத்ரி, ரஸியா சுல்தானா ஆகிய பெண் எம்.எல்.ஏ.க்களும்அமைச்சர்களாக பதவி ஏற்றனர்.

ராகுல், மன்மோகன்

இந்த பதவி ஏற்பு விழாவுக்கு காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், ஆனந்த் சர்மா, பூபிந்தர் சிங் ஹூடா,அஜெய் மகான்,சச்சின் பைலட், பிரதாப் சிங் பஜ்வா உள்ளிட்ட முக்கிய காங்கிரஸ் தலைவர் வந்து இருந்தனர். மேலும், அமரிந்தர் சிங் மனைவியும், முன்னாள் மத்திய அமைச்சருமான பிரநீத் கவுர் மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்களும் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டனர்.

18 அமைச்சர்கள்

பஞ்சாப் மாநிலத்தில் அதிகபட்சமாக 18 அமைச்சர்கள் வரை இருக்கலாம் என்பது விதியாகும். இப்போது 9 பேர் மட்டும் அமைச்சர்களாக பொறுப்பு ஏற்றுள்ளனர். விரைவில் அமைச்சரவை விரிவாக்கப்படும் என காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.