Am I presidential candidate? Union minister Sushma shocked

குடியரசு தலைவர் வேட்பாளராக தான் அறிவிக்கப்படக்கூடும் என்று பரவி வரும் செய்திகளை மத்திய வௌியுறவுத்துறை அமைசர் சுஷ்மா சுவராஜ் மறுத்துள்ளார்.

குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் ஜூலை 24-ந்தேதியோடு முடிகிறது. இதையடுத்து, புதிய குடியரசு தலைவரைத் தேர்வு செய்ய தேர்தல் ஆணையம் அறிவிக்கை வௌியிட்டுள்ளது.

அதன்படி, கடந்த 14-ந்தேதி முதல் வரும் 28ந் தேதிவரை வேட்பு மனுத்தாக்கலும், 30-ந்தேதி மனு பரிசீலனையும் நடக்கும்.

தேர்தலில் ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டால் ஜூலை 17-ந்தேதி தேர்தலும், 20-ந்தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும்.

இந்நிலையில், மத்தியில் ஆளும் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் இன்னும் ஜனாதிபதி வேட்பாளர் யார் என அறிவிக்கப்படவில்லை.

அதேசமயம், எதிர்க்கட்சிகளோ மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்படும் வேட்பாளர் யார் என்பதை பார்த்துவிட்டு தாங்கள் முடிவு எடுக்கலாம் என காத்திருக்கின்றன.

இதனால், நேற்று முன்தினம் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்தியன் கம்யூனிஸ்ட் தேசியச்ச செயலாளர் டி.ராஜா ஆகியோரை பா.ஜனதா கட்சியின் மூத்த அமைச்சர்கள் குழு சந்தித்துப் பேசினார்கள். ஆனால், அப்போது வேட்பாளர் குறித்து ஆலோசிக்கப்படவில்லை.

இந்நிலையில், ஊடகங்கள் வாயிலாக தேசியஜனநாயகக்கூட்டணி சார்பில் மத்திய அமைச்சர் சஷ்மா சுவராஜ் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என செய்திகள் வந்தன.

இது குறித்து மத்திய அமைச்சர் சுஷ்மாவிடம் டெல்லியில் நிருபர்கள் நேற்று கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறுகையில், “ ஜனாதிபதி வேட்பாளராக நான் தேர்வு செய்யப்படுவேனா?.

அவ்வாறு வரும் செய்திகள் அனைத்தும் வதந்திகள். நான் வௌியுறவுத்துறை அமைச்சராக இருக்கிறேன். என் துறை ரீதியான கேள்விகளை மட்டுமே கேட்கலாம்’’ எனத் தெரிவித்தார்.