மத்திய பிரதேசத்தில் காவல்நிலையத்தில் முற்றுக்கை போராட்டத்தில் ஈடுபட்ட  பத்திரிக்கையாளர்களை கைது செய்து , அரை நிர்வாணமாக நிற்க வைக்கப்பட்டதாக சொல்லப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

மத்திய பிரதேசத்தில் காவல்நிலையத்தில் முற்றுக்கை போராட்டத்தில் ஈடுபட்ட பத்திரிக்கையாளர்களை கைது செய்து , அரை நிர்வாணமாக நிற்க வைக்கப்பட்டதாக சொல்லப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் சித்தி மாவட்டத்தில் ஆளும் பாஜக எம்.எல்.ஏ.வாக உள்ளார் கேதர்நாத் சுக்லா. இவரது மகன் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு கருத்துகள் பரவி வந்துள்ளது. இதுக்குறித்து எம்.எல்.ஏ சுக்லா கடந்த மாதம் கொட்வாலி போலீஸில் புகார் கொடுத்துள்ளார். இந்நிலையில் புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், உள்ளூர் நாடக கலைஞர் நீரஜ் குந்தார் என்பவர் தான் எம்.எல்.ஏ மகன் குறித்து அவதூறாக கருத்துகளை ஸ்பேஸ்புக்கில் பதிவிட்டு இருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து, ஸ்டேஷன் அழைத்து வந்து விசாரித்து உள்ளனர்.

போலீசாரின் கைது நடவடிக்கை குறித்து தகவல் பரவிய நிலையில், பத்திரிகையாளர்கள், குந்தார் உறவினர்கள் என 40 க்கும் மேற்பட்டோர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இந்நிலையில் விபரீதம் பெரிதாகவே, முற்றுகை போராட்டம் நடத்தியவர்களில் 8 பேரை போலீசார் கைது செய்து, கூட்டத்தை கலைத்துள்ளனர். இந்நிலையில் கைதான 8 பேரை, மிக கொடூரமாக போலீஸார் அடித்து உதைத்து அனைவரையும் ஆடையை கழற்றும் படி உத்தரவிட்டதாக சொல்லப்படுகிறது. 

அதோடு அவர்கள் அனைவரையும் அரை நிர்வாணத்தோடு நிற்கும்படி போலீஸார் நிர்ப்பந்தித்தாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. மேலும் பத்திரிகையாளர்கள் போலீஸ் நிலையத்தில் அரை நிர்வாணமாக நிற்க வைக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டதற்கு மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

கைது செய்யப்பட்டவர்களில் பத்திரிகையாளர்கள் யாரும் இல்லை என அம்மாவட்ட எஸ்.பி முகேஷ் குமார் தெரிவித்துள்ளார். மேலும் கைது செய்யப்படுபவர்கள் லாக்கப்பில் வைக்கப்படும் போது அவர்கள் தற்கொலை போன்ற காரியத்தில் ஈடுபடாமல் இருக்க ஆடைகளை கழற்ற சொல்வது வழக்கமான ஒன்றுதான் என்று கூடுதல் டிஜி வெங்கடேஷ்வர் ராவ் புது விளக்கம் கொடுத்துள்ளார். குந்தார் கைது செய்யப்பட்டதற்கு சிலர் போலீஸ் நிலையத்திற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். எனவே தடுப்பு நடவடிக்கையாக அவர்கள் கைது செய்யப்பட்டனர் என்றும் தெரிவித்தார்.