All the employees of thiruppathi will put Namam
திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயிலில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் இந்துக்கள் என்பதை உணர்த்தும் வகையில், கண்டிப்பாக நெற்றியில் ‘திரு நாமம்’ இட்டுக்கொள்ள வேண்டும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருப்பதி கோயிலில் இந்துக்களைத் தவிர பிற மதத்தினர்கள் பணியாற்ற கோயில் விதிமுறைப்படி அனுமதியில்லை. ஆனால், இந்த விதிமுறைகளை மீறி 44 ஊழியர்கள் பணியாற்றி வந்தது சமீபத்தில் தெரியவந்தது. இதற்கு விஸ்வ இந்து பரிசத் அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இதையடுத்து அந்த 40-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு விளக்கம் கேட்கப்பட்டது. அந்த ஊழியர்கள் அனைவரும் மாநிலத்தின் பிற துறைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளனர்.
இந்நிலையில், திருப்பதி கோயிலில் இந்து மதத்தைச் சேர்ந்த ஊழியர்களே பணிபுரிகிறார்கள் என்பதை உணர்த்தும் வகையில் ‘திரு நாமத்தை நெற்றியில் இட்டுக்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டது.
இது குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாக அதிகாரி அணில் குமார் சிங்கால் கூறியதாவது-
திருநாமம் என்பது இந்து கலாச்சாரத்தின் அடையாளம். இதன் மூலம் இந்து மதத்தின் மீது தீவிர பற்றாக இருக்கிறார்கள் என்பது தெரியவரும். திருப்பதி கோயிலில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் இந்துக்கள் என்பதை உணர்த்த முடியும்.
திருப்பதி கோயிலில் பணியாற்றி வந்த பிற மதத்தைச் சேர்ந்த 44 ஊழியர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் பல்வேறு துறைகளுக்கும் மாற்றப்பட உள்ளனர்.1989ம் ஆண்டு மற்றும் 2007ம் ஆண்டு ஆந்திரா அரசு வெளியிட்ட அரசாணைப்படி, திருப்பதி கோயிலில் இந்துக்களைத் தவிர மற்ற மதத்தினர் யாரும் பணியாற்றக் கூடாது என்ற கட்டுப்பாடு இருக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
