All set for grandest Diwali in Ayodhya cm participated first time
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இந்த முறை மிக பிரமாண்டமான வகையில் தீபாவளி கொண்டாடப்பட்டது.
தீபங்களின் திருவிழா என்று சொல்லப்படும் தீபாவளி அன்றுதான், 14 வருடங்கள் வனவாசம் மேற்கொண்ட ராமபிரான், பின்னர் அயோத்தி மாநகருக்குத் திரும்பினார் என்கிறது ராமாயணம். அந்த நாளில் நகர் மக்கள் தங்கள் வாழ்வில் வெளிச்சம் வந்துவிட்டதாகக் கூறி, விளக்குகளை ஏற்றி வைத்து, ராமபிரானை பிரமாண்டமாக வரவேற்றனராம்.
அதனை நினைவூட்டும் வகையில், நேற்று தீபாவளி அயோத்தியில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. இந்த முறை சரயு நதிக்கரையைச் சுற்றிலும் சுமார் 2 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டன.
மாநில ஆளுநர் ராம் நாயக், முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட அரசியல், சமூக பிரபலங்கள் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அயோத்தியில் நடைபெறும் இந்த தீபாவளி நிகழ்ச்சியில் மாநில முதல்வர் கலந்து கொண்டது இதுதான் முதல்முறையாம்!
அயோத்தியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ஆலயங்கள் திருவிழாக் கோலம் பூண்டிருந்தன. எங்கும் ஒளி வெள்ளமாகக் காட்சியளித்தது. செவ்வாய்க் கிழமை மாலையிலேயே சரயு நதி ஜொலிக்கத் தொடங்கியது. சரயு நதி தீரத்தில் விளக்குகளை ஏற்றி முதல்நாள் விழா நிகழ்ச்சி ஒத்திகை பார்க்கப்பட்டது. புதன்கிழமை திவ்ய தீபோத்ஸவ் என்று அதிகாரபூர்வமாக பெயரிடப்பட்டு, மாநில சுற்றுலாத் துறையும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தின. 1,71,000 எண்ணெய் ஊற்றப்பட்ட விளக்குகளில் தீபம் ஏற்றப்பட்டு, உலக சாதனை படைக்கப்பட்டது. தீபாவளி மற்றும் ராம் கீ பைடி என்ற இந்த விழாவுக்காக, சரயு கட்-டில் ஏற்றப்பட்ட தீப உத்ஸவத்தைக் காண பெருமளவிலான மக்கள் கூடினர்.
