வரும் அக்டோபர் 1-ம் தேதியில் இருந்து வரி தொடர்பாக கொடுக்கப்படும் அனைத்து நோட்டீஸ்கள் மீதும், பதில் வந்த மூன்றே மாதத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். 

நாட்டில் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தேக்க நிலை நிலவுவதாக கூறியுள்ளதுடன், ஒட்டுமொத்த நிதித்துறையும் இதுபோன்றதொரு சுழலில் சிக்கியதில்லை என்று குறிப்பிட்டுள்ளார். இந்த சூழலில் தனியார் துறையின் தயக்கங்களைக் களைய அரசும், ரிசர்வ் வங்கியும் உடனடி நடவடிக்கையை எடுக்க வேண்டும் என நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ்குமார் கூறியிருந்தார். 

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களுக்கு விளக்கமளித்து வருகிறார். அதில், உலகளவில் பொருளாதாரம் வளர்ச்சி மந்த நிலையில் உள்ளது. அமெரிக்கா, ஜெர்மனி, சீனா போன்ற வளர்ந்த நாடுகளிலும் பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளது. லக அளவில் பொருளாதார வளர்ச்சி 3.2 சதவீதம் என்ற அளவில் இருந்து குறைக்கப்படலாம். பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க துணிச்சலான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என தெரிவித்தார். 

சீர்திருத்த அறிவிப்புகள்;-

* பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.70,000 கோடி நிதி ஒதுக்கப்படும் என நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

* பங்குச் சந்தைகளில் முதலீடுகள் செய்வதற்கு ஊக்கம் தரப்படும். 

* வங்கிகளுக்கு கூடுதலாக ரூ.5 லட்சம் கோடி மூலதன நிதி வழங்கப்படும் என நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.

* சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் வங்கிக் கடன் பெறும் நடைமுறைகள் எளிதாக்கப்படும். 

* வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டி குறைய நடவடிக்கை எடுக்கப்படும்.

* வரி விதிப்புகள் சிலவற்றை திரும்பப் பெறும் நடவடிக்கை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். 

* வட்டிக் குறைப்பு பலன்களை வங்கிகள் இனி அப்படியே மக்களுக்கு வழங்கும்.

* ஜிஎஸ்டி ரிஃபண்ட் தொகை தொடர்பான பிரச்சனைகள் 60 நாளில் தீர்வு எட்டப்படும். 

* ஜிஎஸ்டி ரிஃபண்ட் தொகை 30 நாட்களுக்குள் திரும்பத் தரப்படும்.

* முதலீட்டாளர்கள் நலன் கருதி உயர்த்தப்பட்ட சர்சார்ஜ் வரி நீக்கப்படும். 

* தொழில் கடனை அடைத்தவர்களுக்கு 15 நாட்களில் வங்கிகள் ஆவணங்களைத் திருப்பித் தர வேண்டும். 

* வீட்டுக்கடன், வாகனக் கடன் வட்டி விகிதம் குறைக்கப்படும். 

* பல்வேறு துறைகளில் சீர்திருத்தத்துக்கு அரசு முன்னுரிமை வழங்கப்படும்.

* வருமான வரித்துறை நோட்டீசுக்கு 3 மாதத்தில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். 

* வீட்டுக்கடன் வழங்கும் வங்கிகளுக்கு கூடுதலாக ரூ.20,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 

* அரசு ஒப்பந்தாரர்களுக்கு பணி முடிந்த உடன் நிதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* நிதி நிறுவனங்கள் ஆதாரை பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்படும். 

* பி.எஸ். IV ரக வாகனங்கள் 2020 மார்ச்சுக்கு பிறகும் சாலைகளில் ஓடலாம்.

* அரசுத் துறைகளுக்கு புதிய கார்கள் வாங்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.