நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை மறுநாள் துவங்க உள்ளது. இதையொட்டி லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நவம்பர் 16ம் தேதி தொடங்கி டிசம்பர் 16ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. வரும் 16ம் தேதி கூட்டத் தொடர் ஆரம்பமாக உள்ள நிலையில், மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இன்றுஇரவு 7 மணியளவில் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தின் போது, நாடாளுமன்ற, குளிர்காலக் கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து எதிர்க்கட்சி தலைவர்களுடன் சுமித்ரா மகாஜன் ஆலோசனை நடத்துகிறார். இதேபோன்று கூட்டத் தொடருக்கு முதல் நாளான நாளையும், மத்திய அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.

பிரதமர் நரேந்திரமோடி 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த 8ம் தேதி இரவு அதிரடியாக அறிவித்தார். மோடியின் இந்த நடவடிக்கைக்கு பெரும்பாலான கட்சிகள் வரவேற்பு தெரிவித்தன. ஆனாலும், திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் ஆரம்பம் முதலே இது பலன் தராத நடவடிக்கை என்று எதிர்ப்பு தெரிவித்தன.
இந்தக் கூட்டத் தொடரில் ஜி.எஸ்.டி மசோதா, எல்லையில் தாக்குதல் உள்ளிட்ட விவகாரங்கள் மட்டுமின்றி பழைய ரூபாய் நோட்டுகள் ரத்து செய்யப்பட்ட விவகாரம் பெரியளவில் வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் ரத்து செய்யப்பட்டது குறித்து, நவம்பர் 16ம் தேதி நாடளுமன்ற கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் திரிணாமூல் காங்கிரஸ் நோட்டீஸ் கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
