பஹல்காம் சம்பவம் தொடர்பாக ராஜ்நாத் சிங் தலைமையில் டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தது. இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம். 

 Pahalgam incident: All Party Meeting In Delhi: ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக சுட்டதில் அப்பவி சுற்றுலா பயணிகள் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கொடூர சம்பவத்தால் நாடு முழுவதும் மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். இந்த சம்பவத்துக்கு காரணமான பயங்கரவாதிகள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களை பிடித்து தண்டிப்போம் என்று பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளார்.

டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டம் 

பஹல்காம் சம்பவத்தை தொடர்ந்து அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தது. அதன்படி இன்று மாலை நாடாளுமன்றத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது. பாதுகாப்புத்துறை ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நாட்டா ஆகியோர் கலந்து கொண்டனர்.

உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

மேலும் எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி, திமுக, திரிணாமுல் காங்கிரஸ், தெலுங்கு தேசம், சமாஜ்வாதி. ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்றனர். திமுக சார்பில் திருச்சி சிவா அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டார். கூட்டம் தொடங்கியதும் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

பாகிஸ்தானியர்களுக்கான விசா முழுமையாக நிறுத்தம்! இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு!

என்ன முடிவு எடுக்கப்பட்டது?

இதனைத் தொடர்ந்து பஹல்காம் சம்பவம் தொடர்பாகவும், அதன்பிறகு மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா ஆகியோர் விளக்கினார்கள். அப்போது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் சில யோசனைகள் முன்வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

ஜம்மு-காஷ்மீரிலும் அனைத்துக் கட்சி கூட்டம் 

இதேபோல் பஹல்காம் சம்பவத்தை தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரிலும் மாநில முதல்வர் உமர் அப்துல்லா தலைமையில் ஸ்ரீநகரில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்ட்டத்தில் அனைத்து முக்கிய கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டனர். அப்போது மத்திய அரசின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. பயங்கரவாதத்தை ஒன்றிணைந்து எதிர்கொள்ளவும், சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தை கூட்டவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க முயன்றபோது உயிரிழந்த காஷ்மீரி சையத் ஆதில் ஹுசைன் ஷாவிற்கு அனைத்துக் கட்சிக் கூட்டம் அஞ்சலி செலுத்தியது.

மத்திய அரசுக்கு முழு ஆதரவு 

மாநிலத்திற்கு வெளியே உள்ள ஜம்மு காஷ்மீர் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து அரசுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை கூட்டத்தில் எழுப்பப்பட்டது. காஷ்மீரில் அமைதியையும் ஒற்றுமையையும் சீர்குலைக்கும் நோக்கில் நடந்த இந்த கோழைத்தனமான செயலுக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும் கூட்டத்திற்குப் பிறகு வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிராக காஷ்மீர் ஒன்றுபட்டு எழுந்ததை கூட்டம் பாராட்டியது. பிற மாநிலங்களில் உள்ள காஷ்மீரி மாணவர்கள் மற்றும் பிற காஷ்மீர் மக்களைப் பாதுகாக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஒற்றுமையுடன் செயல்படுவோம் 

ஒற்றுமையுடன் செயல்பட அரசியல் கட்சிகளுக்கு கூட்டுப் பொறுப்பு உள்ளது என்றும், அரசியலை மறந்து அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் முதல்வர் உமர் அப்துல்லா கூட்டத்தில் கேட்டுக் கொண்டார். பாகிஸ்தானை வெல்ல விடக்கூடாது என்றும், சுற்றுலாப் பயணிகள் தொடர்ந்து காஷ்மீருக்கு வர வேண்டும் என்றும் முன்னாள் முதலமைச்சரும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான ஃபாரூக் அப்துல்லா அழைப்பு விடுத்தார்.

சிம்லா ஒப்பந்தம் என்றால் என்ன? இதை பாகிஸ்தான் ரத்து செய்ததால் இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?