ரயில் உள்ளிட்ட எதாவது, ஒரு போக்குவரத்து சேவையை பயன்படுத்தி உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேறுமாறு அங்குள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது. 

ரயில் உள்ளிட்ட எதாவது, ஒரு போக்குவரத்து சேவையை பயன்படுத்தி உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேறுமாறு அங்குள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது. உக்ரைன் மீது கடந்த 24 ஆம் தேதி முதல் ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களான கீவ், கார்கிவ் ஆகிய பகுதிகளை குறிவைத்து ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் தாக்குதலில் பல பகுதிகள் உருகுலைந்தன. மேலும் பல உயிர்களும் பறிப்போயின. இந்த போதிலும் போர் தொடர்ந்து வந்தது. இந்த நிலையில் ரஷ்யா உக்ரைன் நாடுகளுக்கு இடையே நடைபெற்ற முதல் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.

இதை அடுத்து இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், மனிதாபிமான அடிப்படையில் உதவ முடிவு செய்யப்பட்டது. அதன்படி உக்ரைனில் உள்ள கீவ் , கார்கிவ், சுமி, மரியபோல், வோல்நோவாக்கா ஆகிய 4 நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்திருந்தது. இதனை பயன்படுத்தி அங்குள்ள இந்தியர்களை மத்திய அரசு மீட்டு வந்தது. மேலும் உக்ரைனில் சிக்கி உள்ள 20 ஆயிரம் இந்திய மாணவர்கள் பத்திரமாக விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வர ஆபரேஷன் கங்கா என்கிற திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியது. அந்த திட்டத்தில் இந்திய விமானப்படை விமானமும் இடப்பெற்றது.

இந்த திட்டத்தின் அடிப்படையில் மீட்பு விமானங்கள் பல உக்ரைனின் அண்டை நாடான ஹங்கேரியின் தலைநகர் புடாபெஸ்டுக்குச் சென்று அங்கு இருந்து இந்திய மாணவர்களை மீட்பு விமானங்களில் படிப்படியாக மீட்டு வந்தது. தற்போது பெரும்பான்மையான மாணவர்கள் மீட்கப்பட்டுவிட்டனர். இந்த நிலையில் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற அங்குள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. மனிதாபிமான அடிப்படையில் வெளியேற கொடுக்கப்பட்டுள்ள அவகாசத்தை உக்ரைனில் உள்ள இந்தியர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரயில் உள்ளிட்ட எதாவது, ஒரு போக்குவரத்து சேவையை பயன்படுத்தி இந்தியர்கள் அனைவரும் வெளியேறுங்க என்றும் இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது.