இந்தியாவில் உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்யும் அனைத்துப் பயணிகளின் விவரங்களையும் அளிக்க வேண்டும் என்று விமானப்போக்குவரத்து அமைச்சகத்திடம் தேசிய புலனாய்வு அமைப்பு(நாட்கிரிட்) கேட்டுக்கொண்டுள்ளது.

இதன் மூலம் யார் குறிப்பிட்ட வழித்தடங்களில் அதிகமாகப் பயணிக்கிறார்கள், அவர்கள் யார் எனும் விவரங்களை சேகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் 30-ம் தேதி நடந்த கூட்டத்தில் நாட்கிரிட் அதிகாரிகள், உளவுத்துறை அதிகாரிகள், விமானப்போக்குவரத்து துறை அமைச்சகம், விமான நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் பங்ேகற்றார்கள். அப்போது இந்த கோரிக்கையை நாட்கிரிட் அதிகாரிகள் வைத்துள்ளனர்.

இதுகுறித்து விமானப்போக்குவரத்து துறைஅமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில் “ உள்நாட்டு விமானங்களில் பயணிக்கும் பயணிகள் குறித்த விவரங்களை வழங்கக் கோரி புலனாய்வு பிரிவுக்கு சட்டம் அதிகாரம் வழங்கியுள்ளது. அதன் அடிப்படையில்தான் கேட்கிறார்கள் அவர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க முடியாது என்று கூற முடியது” எனத் தெரிவித்தார்

ஏற்கனவே விமானநிறுவனங்களும், விமானப்போக்குவரத்து துறை அமைச்சகமும் பயணிகள் குறித்த ஏராளமான விவரங்களை சுங்கத்துறை, குடியேற்ற அதிகாரிகளுக்கு வழங்கி வருகின்றன.

இப்போது நாட்கிரிட் அதிகாரிகளுக்கு விவரங்களை வழங்கி அவர்கள் மூலம் உளவுத்துறை, ரா, எப்ஐயு, சிபிஐ,அமலாக்கப்பிரிவு, வருமானவரித்துறை, வருவாய் புலனாய்வு, போதை மருந்து தடுப்பு, நேரடி வரிகள் வாரியம், மறைமுக வரிகள் வாரியம் உள்ளிட்ட அனைத்து துறைகளும் தங்களிம் உள்ள விவரங்களை பகிர்ந்து கொள்ள இருக்கின்றன.

இதன் மூலம் ஒரு பயணி குறிப்பிட்ட நகரங்களுக்கு அடிக்கடி பயணிக்க காரணம் என்ன, தீவிரவாதிகளுடன் தொடர்பு இருக்கறதா, அல்லது வேறு ஏதாவது திட்டமாக என்பதை முன்கூட்டியே அறியவும் இது பயன்படுகிறது. தீவிரவாதிகள் நடமாட்டத்தை முன்கூட்டியே தடுத்து நிறுத்தவும், கண்டுபிடிக்கவும் முடியும் என்று அரசு விசாரணை முகமைகள் நம்புகின்றன.

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மும்பை தாக்குதலுக்கு பின் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால் அதன்பின் வேகமெடுக்காத நிலையில் மத்தியில் பாஜக அரசு வந்து 2 ஆண்டுகளுக்குப்பின ்2016-ம் ஆண்டில் இருந்து வேகமெடுத்து வருகிறது.அதாவது பயணி குறித்த ஒருங்கிணைந்த புள்ளிவிவரங்கள் அனைத்தும் ஒர தளத்தின் கீழ் சேகரி்க்கும் திட்டமாகும்.