all community can become priests

கேரளாவைப் போல அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க கர்நாடகாவும் தயார் என அம்மாநில முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.

கேரள மாநில அரசின் அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில், திருக்கோயில் அர்ச்சகர்களாக முறைப்படி பயிற்சி பெற்றவர்களில் 62 பேரை திருவிதாங்கூர் தேவசம் போர்டு தேர்வு செய்து இருக்கிறது. இதில் 32 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு, 26 பேர் பிராமணர்கள், மீதமுள்ள பிராமணர் அல்லாதோர் 36 பேர் நியமனம் பெற்றுள்ளனர். இதில் தலித் வகுப்பைச் சேர்ந்தோர் 6 பேர் என்பது சிறப்புக்கு உரியது. 

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் கேரளாவின் இந்த செயலை முற்போக்காளர்கள் வரவேற்கின்றனர். 

இதையடுத்து தமிழ்நாட்டிலும் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல் வலுவாக எழத் தொடங்கியுள்ளது. 2006-ம் ஆண்டு திமுக ஆட்சியில் இதற்காக சட்டம் இயற்றி, தொடங்கப்பட்ட ஆகம பாடசாலையில் பயின்றவர்களை அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

2015 டிசம்பரில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், ரமணா ஆகியோர் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டம் செல்லும் என்று தீர்ப்பு கூறினர். இதிலும் அர்ச்சகர் நியமனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வழக்கு போட்டால், சட்டப் பரிகாரமே தீர்வு என்றும், சேசம்மாள் வழக்கில் கூறப்பட்டுள்ளவாறு அர்ச்சகர் நியமனம் ஆகம விதிகளின்படி செயல்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

ஆனாலும் ஆகம பாடசாலையில் பயிற்சி பெற்றவர்கள் இதுவரை அர்ச்சகர்களாக நியமிக்கப்படவில்லை.

கேரளாவுக்கே முன்பே தொடங்கப்பட்ட இந்த முயற்சியை தமிழகத்தில் இன்னும் செயல்படுத்தமுடியவில்லை. ஆனால் கேரளா செயல்படுத்திவிட்டது.

இந்நிலையில், கேரளாவைப் போலவே கர்நாடகாவிலும் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க தயார் என அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

இதையடுத்து தமிழகத்தில் அனைத்து சாதியினரும் எப்போது அர்ச்சகராக்கப்படுவர்? என்ற கேள்வி எழுந்துள்ளது.