பக்தர்கள் தரிசனத்துக்காக பூரி ஜெகநாதர் கோவிலின் 4 கதவுகளும் திறப்பு!
பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக ஒடிசா மாநிலம் பூரி ஜெகநாதர் கோவிலின் 4 கதவுகளும் திறக்கப்பட்டன
பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு வசதியாக, ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள பிரசித்தி பெற்ற ஜெகநாதர் கோவிலின் நான்கு கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. செய்தி. ஒடிசாவில் புதிதாக அமைந்துள்ள பாஜக அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் பூரி ஜெகநாதர் கோவிலின் நான்கு கதவுகளையும் திறக்க முடிவு செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
பாஜக அரசு உறுதியளித்தபடி, ஒடிசாவின் பூரியில் உள்ள புகழ்பெற்ற ஜெகநாதர் கோவிலின் நான்கு வாயில்களும் (துவாரங்கள்) இன்று முதல் பக்தர்களுக்காக திறக்கப்பட்டுள்ளன. மங்கள அலாதி சடங்குகளின் போது கோயிலின் 4 கதவுகளையும் திறக்கும் முடிவை ஒடிசாவின் புதிய பாஜக முதல்வர் மோகன் சரண் மாஜி நேற்று அறிவித்தார். அதன்படி, முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரும் கோயில் சடங்குகளில் பங்கேற்பதற்காக பூரிக்கு சென்று அதில் கலந்து கொண்டனர்.
இதுதவிர, பூரி ஜெகநாதர் கோவிலின் வளர்ச்சி மற்றும் நிர்வாகத்திற்காக நிதியம் உருவாக்கப்படும் எனவும், அதில் ரூ.500 கோடி சேமிக்கப்படும் எனவும் முதல்வர் சரண் மாஜி அறிவித்துள்ளார்.
ஒடிசாவில் உள்ள புண்ணிய நகரமான பூரியில் உள்ள புகழ்பெற்ற ஜெகநாதர் கோவிலின் நான்கு கதவுகளையும் திறக்கும் பணி ஜூன் 11ஆம் தேதி தொடங்கியது. இது தொடர்பாக பூரி மாவட்ட ஆட்சியர் சித்தார்த் சங்கர் ஸ்வைன் தலைமையில் கூட்டம் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக இறுதி முடிவு எடுக்க குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.
இதனிடையே, வரவிருக்கும் ரத யாத்திரைக்கான தேர் கட்டுமானப் பணிகளும் நடந்து வருகின்றன. ஜெகநாதர் கோவிலின் நான்கு கதவுகளையும் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. முன்னதாக ஜூலை 20, 2023 இல், பூரி ஜெகநாதர் கோயிலின் நான்கு நுழைவு கதவுகளையும் பார்வையாளர்களுக்காக திறக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்றன.
ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி ஜகந்நாதர் கோயில் உலகப் புகழ்பெற்றது. இங்கு பகவான் விஷ்ணு வாசம் செய்வதால் பக்தர்களால் இது வைகுண்டத்துக்கு இணையாகப் போற்றப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் ரதயாத்திரை புகழ்பெற்றது. இதற்காக ஒவ்வோர் ஆண்டும் புதிய தேர்கள் செய்யப்படும். ஜெகநாதர், சுபத்ரா மற்றும் பாலபத்ரா ஆகிய மூன்று தெய்வங்களும் கோவிலில் வழிபடப்படுகின்றன.
ஜூலையில் மத்திய பட்ஜெட் தாக்கல்? 7ஆவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன்!
பூரி ஜெகநாதர் கோவிலில் 4 கதவுகள் உள்ளன. அதன்படி,
** சிங்க வாயில் அல்லது 'சிங்கத்வாரா' (கிழக்கு திசை) - ஒரு பக்தர் இந்த வாயில் வழியாக கோயிலுக்குள் நுழைந்தால், அவர்கள் மோக்ஷத்தைப் பெறுவார்கள் என நம்பப்படுகிறது.
** குதிரை வாயில் அல்லது 'அஸ்வத்வாரா' (தெற்கு திசை) - இது வெற்றியின் சாலை என்றும் அழைக்கப்படுகிறது.
** யானை வாயில் அல்லது 'ஹஸ்தித்வாரா' (வடக்கு திசை) - செல்வம் தேடும் பக்தர்கள் இந்த வாயில் வழியாக கோவிலுக்குள் நுழைகின்றனர்.
** புலி வாயில் அல்லது வியாக்ரத்வாரா (மேற்கு திசை) - இந்த வாயில் வழியாக கோவிலுக்குள் நுழைவது பக்தர்களுக்கு அவர்கள் செய்ய வேண்டிய தர்மத்தை நினைவூட்டுகிறது என நம்பப்படுகிறது.