AKJoti was appointed as the 21st Chief Election Commissioner

நாட்டின் 21-வது தலைமைத் தேர்தல் ஆணையராக அச்சல் குமார் ஜோதி நேற்று பொறுப்பு ஏற்றுக்கொண்டார். தேர்தலை நியாயமாகவும், நம்பிக்கையான முறையிலும் நடத்த முழுமையாக கடமைப்பட்டுள்ளேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த நஜீம் ஜைதி நேற்று முன் தினம் ஓய்வுெபற்றார். இதையடுத்து, 21-வது தலைமைத் தேர்தல் ஆணையராக ஏ.கே.ஜோதி நியமிக்கப்பட்டார்.

64 வயதான அச்சல் குமார் ஜோதி 1975ம் பேட்சில் இந்திய ஆட்சிப்பணிக்கு தேர்வு ஆனவர் ஆவார். பிரதமர் மோடி குஜராத்தில் முதல்வராக இருந்த போது, குஜராத் மாநில தலைமைச் செயலாளராக பணியாற்றியவர் ஜோதி. அதன்பின், கடந்த 2013ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

குஜராத் மாநிலத்தில் ஊழல் கண்காணிப்பு ஆணையராக பணியாற்றிய அச்சல்குமார், கடந்த 1999ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரை காண்ட்லா துறைமுகத்தின் தலைவராகவும், சர்தார் சரோவர் நர்மதா நிகம் அணையின் மேலாளர் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

2015ம் ஆண்டு மே 8ம் தேதி தேர்தல் ஆணையத்தின் 3 ஆணையர்களில் ஒருவராகஅச்சல் குமார் நியமிக்கப்பட்டார். நஜீம் ஜைதி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, ஏ.கே.ஜோதியை தலைமைத் தேர்தல் ஆணையராக மத்திய அரசு பதவி உயர்வு வழங்கியது. அச்சல் குமார் 2018ம் ஆண்டு ஜனவரி 17ம் தேதி வரை இந்திய தலைமை தேர்தல் ஆணையராக நீடிப்பார்.

இந்நிலையில், புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக ஏ.கே. ஜோதி நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், “ நியாயமாகவும், சுதந்திரமாகவும், நம்பிக்கையான முறையிலும் தேர்தலை நடத்த கடமைப்பட்டுள்ளேன். மாநில, மற்றும் பொதுத் தேர்தல்களில் மின்னணு நிர்வாக முறையை தொடர்ந்து புகுத்த கூடுதல் கவனம் செலுத்தப்படும். அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்கும் வகையிலான நடவடிக்கைகள் தொடரும்’’ எனத் தெரிவித்தார்.

அச்சல் குமாருக்கு தலைமைத் தேர்தல் ஆணையராக ஆனதைத் தொடர்ந்து ஆணையர் பதவியில் ஒன்று காலியாகிறது. அந்த பதவிக்கு, ஓம் பிரகாஷ் ராவத் தேர்வு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.