நாடாளுமன்றத் தேர்தலில் மெகா கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி முயற்சி மேற்கொண்டது. ஆனால், அந்த முயற்சி பெரிய அளவில் கைகூடவில்லை. உ.பி.யில் சமாஜ்வாடி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்தன. காங்கிரஸ் கட்சியை அக்கட்சிகள் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. அதே சமயம் காங்கிரஸ் கட்சியின் பாரம்பரிய தொகுதிகளான அமேதி, ரேபரேலி ஆகிய தொகுதிகளில் மட்டும் போட்டியில்லை என இக்கட்சிகள் அறிவித்தன.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியுடன் ஏன் கூட்டணி அமைக்க முடியாமல் போனது என்பது பற்றி அகிலேஷ் யாதவ் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டி:
பாஜகவைப் பொறுத்தவரை கூட்டணி கட்சிகளுடன் திறந்த மனதுடன் சமரசம் செய்துகொள்கிறது. பீஹாரில் சென்ற நாடாளுமன்ற தேர்தலில், அதிக தொகுதிகளில் பாஜக வென்றது. நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம் 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆனால், இந்தத் தேர்தலில் இரு கட்சிகளும் 50 : 50 என்ற சதவீத அடிப்படையில் தொகுதிகளைப் பிரித்து தேர்தலில் போட்டியிடுகின்றன. ஆனால், காங்கிரஸ் கட்சி  கூட்டணி கட்சிகளுடன் இப்படி விட்டுக் கொடுத்து நடந்து, கூட்டணியை வலுப்படுத்த தவறி விட்டது.
 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணி அமைக்கும் முயற்சிகள் நடந்தன. அப்போது கூட்டணி அமைப்பது தொடர்பாக பேசிக்கொண்டிருந்தோம். அந்த நேரத்தில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளை காங்கிரஸ் கட்சி உற்சாகமாகக் கொண்டாடிக்கொண்டிருந்தது. அந்தக் கொண்டாட்டத்தில், கூட்டணி  குறித்து அந்தக் கட்சி கவலைப்படவில்லை.
இன்னொரு விஷயம், மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியமைக்க, எங்கள் கட்சியின் ஒரே எம்எல்ஏவின் ஆதவைக் கொடுத்தோம். அமைச்சர் பதவியை தருவதாக கூறி காங்கிரஸ் கட்சி ஏமாற்றிவிட்டது. அமைச்சர் பதவி கொடுத்தால், சமாஜ்வாதி கட்சி மத்திய பிரதேசத்தில் வளர்ந்து விடுமோ என்று காங்கிரஸ் கட்சிக்கு அச்சம்.
இவ்வாறு அகிலேஷ் யாதவ் காங்கிரஸை பற்றி காட்டமாகப் பேசியுள்ளார்.