உத்தரபிரதேசத்தில் 26 ஆண்டுகளுக்கு பிறகு பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாதி கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் தலைவர்கள் மாயாவதி, அகிலேஷ் யாதவ் கூட்டாக அறிவித்துள்ளனர். 

இது தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியும், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவும்  லக்னோவில் கூட்டாக இன்று பேட்டியளித்தனர். அதில் நாடாளுமன்ற தேர்தலில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் இணைந்து கூட்டணி அமைக்க வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர் என மாயாவதி தெரிவி்த்துள்ளார். 

எங்களின் இன்றைய அறிவிப்பு மோடிக்கும் அமித்ஷாவுக்கும் தூக்கத்தை கலைக்க போகிறது. மோடி ஆட்சியின் மீது மக்கள் கோபத்தில் உள்ளனர். எங்களது கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இல்லை என திட்டவட்டமாக அறிவித்துள்ளனர். 26 ஆண்டுகளுக்கு முன்னர் பகுஜன் சமாஜ்  கட்சியும், சமாஜ்வாதி கட்சியும் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டு உள்ளது என்றார். 

நாட்டின் நலனுக்காக இருவரும் கருத்து வேறுபாடுகளை மறந்து கூட்டணி சேர்ந்து போட்டியிடுகிறோம். மக்களின் மனம் அறிந்து செயல்பட்டால் கூட்டணியை தாண்டி தேர்தலில் வெற்றி பெறுவோம் என கூறினார். உத்தரபிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் மாயாவதி, அகிலேஷ் கட்சி தலா 38 இடங்களில் போட்டியிடுகின்றனர். 

ஆனால் காங்கிரஸ் உடன் கூட்டணி இல்லை என்று அறிவித்தாலும். அமேதி, ரேபரேலியில் போட்டியில்லை என அறிவித்துள்ளார். இதனால், உ.பி.யில் மறைமுகமாக 2 தொகுதிகளை மட்டும் மாயாவதியும் அகிலேஷும் காங்கிரஸுக்கு விட்டுக் கொடுக்கிறார்களோ என்ற கேள்வி எழுந்தது. இதைப் பற்றி காங்கிரஸ் கட்சி கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.