உத்தரப்பிரதேசத்தில் தனித்து விடப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சி, சமாஜ்வாடியிலிருந்து வெளியேறி தனிக்கட்சி நடத்திவரும் முலாயம் சிங்கின் சகோதரர் ஷிவ்பால் யாதவுடன் கூட்டணி அமைக்க பரிசீலித்து வருகிறது. 

உத்தரப்பிரதேசத்தில் மாயாவதியும் அகிலேஷ் யாதவும் கூட்டணி அமைத்து காங்கிரஸ் கட்சியை கழற்றிவிட்டனர். இதனால், உ.பி.யில் உள்ள 80 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என அக்கட்சி அறிவித்தது. இந்நிலையில் உ.பி.யில் சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் முலாயம் சிங் யாதவின் தம்பியான ஷிவ்பால் யாதவ் நடத்திவரும் பிரகதீஷல் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி ஆலோசித்து வருகிறது.

 

அகிலேஷ் யாதவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால், சமாஜ்வாடி கட்சியிலிருந்து விலகி, இவர் தனிக்கட்சி நடத்தி வருகிறார். காங்கிரஸ் கட்சியை கூட்டணியிலிருந்து அகிலேஷும் மாயாவதியும் விரட்டிவிட்டதால், காங்கிரஸ் கட்சியுடன் எந்த நிபந்தனைகளும் இன்றி கூட்டணி அமைக்க ஷிவ்பால் அறிவித்தார். ஷிவ்பாலின் இந்த அழைப்பை ஏற்க காங்கிரஸ் கட்சி தற்போது பரிசீலித்து வருகிறது. 

மேலும் அஜித்சிங்கின் கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தவும் காங்கிரஸ் கட்சி திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் சிறுகட்சிகளையும் காங்கிரஸ் கூட்டணியில் இணைக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. காங்கிரஸ் தலைமையில் இப்படி ஒரு கூட்டணி அமையும் பட்சத்தில் உ.பி.யில் பாஜக, அகிலேஷ்-மாயாவதி, காங்கிரஸ் கூட்டணி என மும்முனைப் போட்டி ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.