உத்தரபிரதேசத்தில் பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி கட்சி இடையிலான கூட்டணி முறிந்ததாக மாயாவதி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். நடைபெற உள்ள 11 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தனித்து போட்டி எனவும் மாயாவதி அறிவித்துள்ளார். 

26 ஆண்டுகளுக்கு பிறகு மோடியை வீழ்த்த மக்களவை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியும் - சமாஜ்வாதி மெகா கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அங்கு மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 38 இடங்களில் பகுஜன் சமாஜ் கட்சியும், 37 இடங்களில் சமாஜ்வாதி கட்சியும் போட்டியிட்டன. இதனையடுத்து தேர்தல் முடிவில் பாஜக 62 இடங்களை கைப்பற்றியது. மெகா கூட்டணி என்று சொல்லப்பட்ட மாயாவதி 10 இடங்களிலும், அகிலேஷ் 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றனர். இதன் காரணமாக பிஎஸ்பி, எஸ்பி கூட்டணி மக்களிடையே எடுபடாத நிலை தெளிவானது.

 

இந்நிலையில் மக்களவை தேர்தலில் பகுஜன் சமாஜ் பெற்ற தோல்வி குறித்து ஆய்வு செய்வதற்காக கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் மாயாவதி நேற்று ரகசிய ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் பேசிய மாயாவதி, வரப்போகும் 11 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிட உள்ளது என தகவல் வெளியாகின. 

இந்நிலையில் மக்களவை தேர்தல் முடிந்து ஒரு மாதம் நிறைவடைவதற்குள், சமாஜ்வாதி இடையேயான கூட்டணி உறவை முறித்து கொள்ள பகுஜன் சமாஜ் முடிவு செய்துள்ளது. உத்தரபிரதேசத்தில் நடைபெற உள்ள 11 தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட உள்ளதாக மாயாவதி அறிவித்துள்ளார்.

அரசியல் நிர்பந்தம் காரணமாக சமாஜ்வாதி கட்சியுடன் பகுஜன் சமாஜ் கூட்டணி அமைத்தது. இது நிரந்தர பிரிவல்ல - எதிர்காலத்தில் அகிலேஷ் தனது அரசியல் பயணத்தில் வென்றால் இணைவோம், இல்லையெனில் தனித்தே இயங்குவோம் எனவும் மாயாவதி கூறினார்.