Anil Antony resigns from congress:பிரதமர் நரேந்திர மோடி குறித்து பிபிசி சேனல் சார்பில் வெளியிடப்பட்ட ஆவணப்படத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணியின் மகன் அனில் கே அந்தோணி கண்டனம் தெரிவித்த நிலையில் இன்று காங்கிரஸ் கட்சியில் வகித்த பல்வேறு பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
Anil Antony resigns from congress: பிரதமர் நரேந்திர மோடி குறித்து பிபிசி சேனல் சார்பில் வெளியிடப்பட்ட ஆவணப்படத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணியின் மகன் அனில் கே அந்தோணி கண்டனம் தெரிவித்த நிலையில் இன்று காங்கிரஸ் கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
பிபிசி சேனல், “ India:The Modi Question” என்ற ஆவணப்படத்தை தயாரித்துள்ளது. இந்த ஆவணப்படத்தை இந்தியாவில் வெளியிட மத்திய அரசு தடை விதித்துள்ளது.

ஆனால், மத்திய அரசின் எதிர்ப்பை மீறி தெலங்கானாவில் உள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர்கள் இந்த ஆவணப்படத்தை திரையிட்டனர், கேரள மாநிலத்திலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் பிபிசி ஆவணப்படத்தை திரையிடத் தயாராகி வருகிறது. இது தொடர்பான அறிவிப்பையும் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணியின் மகன் அனில் கே.அந்தோனி, ட்விட்டரில் பிபிசியின் மோடி குறித்த ஆவணப்படத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் பதிவிட்ட கருத்தில் “ பாஜகவுடன் பெரிய அளவிலான கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்கூட, நான் நினைப்பது என்னவென்றால், பிரிட்டன் அரசு சார்பில் நடத்தப்படும் பிபிசி சேனல் இந்தியர்களைப் பற்றி நீண்டகாலமாகவே தவறான எண்ணம் கொண்டுள்ளதுதான். அந்த சேனலில், ஈராக் போருக்கு மூளையாக இருந்த, பிரிட்டன் முன்னாள் உள்துறை அமைச்சர் ஜேக் ஸ்ட்ராவின் கருத்தை, இந்திய நிறுவனங்கள் மீது பதிப்பது ஆபத்தான முன்னுதாரணம், நம்முடைய இறையாண்மையை குறைத்து மதிப்பிடுவதாகும்.” எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கேரள காங்கிரஸ் கட்சியின் பல்வேறு பொறுப்பில் இருந்து விலகியதாக அனில் கே அந்தோணி தெரிவித்துள்ளார். ட்விட்ரில் அவர் பதிவிட்ட கருத்தில் “ கேரள காங்கிரஸ், மற்றும் காங்கிரஸ் கட்சியில் எனக்கு அளிக்கப்பட்ட பதவியிலிருந்து நான் விலகுகிறேன்., நான் பதிவிட்ட ட்வீட்டுக்கு பேச்சுசுதந்திரத்துக்கு போராடுபவர்களால் சகிப்புத்தன்மையற்ற அழைப்புகள் எனக்கு வந்தன.நான் மறுத்துவிட்டேன். அன்பை ஊக்குவிக்கிறேன் என்ற பெயரில் வெறுப்பு வளர்கிறது. அனைத்தும் போலித்தனம். என்னுடைய ராஜினாமா கடிதத்தை இணைத்துள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்
அனில் அந்தோணி காங்கிரஸ் தலைமைக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
நான் நேற்று நடந்த சம்பவங்களைக் கருத்தில் கொண்டு, காங்கிரஸ் கட்சியில் எனக்கு இருக்கும் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவது சரியானது என்று நினைக்கிறேன். கேபிசிசி டிஜிட்டல் மீடியா நிறுவனர், காங்கிரஸ் சமூக ஊடகம் மற்றும் டிஜிட்டல் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து விலகுகிறேன்.
குறுகிய காலத்தில் எனக்கு ஆதரவு அளித்த, வழிகாட்டிய கேரள காங்கிரஸ் தலைமை மற்றும் டாக்டர் சசிதரூர், தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். காங்கிரஸ் கட்சிக்கு பல்வேறு வழிகளில் என்னால் முடிந்த அளவு எனக்குரிய தனிப்பட்ட சக்திக்கு பங்களிப்பு செய்திருக்கிறேன் என்று உறுதியாக நம்புகிறேன். இப்போது, நீங்களும், உங்கள் சகாக்களும், தலைமையைச் சுற்றியிருக்கும் கூட்டத்தினரும் சந்தேகத்திற்கு இடமின்றி உங்கள் ஆதரவாக இருக்கும் உங்களைப் புகழ்ந்து பேசும் சிலருக்காக மட்டுமே பணியாற்ற ஆர்வமாக உள்ளீர்கள் என்பதை நான் நன்கு அறிந்திருக்கிறேன். இதுவே தகுதிக்கான ஒரே அளவுகோலாக மாறிவிட்டது”எனத் தெரிவித்துள்ளார்
