பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்செல் நிறுவனம் தனது சேவையை நிறுத்துவதற்கான பணிகளில் இறங்கியுள்ளது. ஏர்செல் நிறுவனத்தை, தமிழகத்தை சேர்ந்த சின்னக்கண்ணன் சிவசங்கரன் என்பவர் கடந்த 1999 ஆம் ஆண்டு தொடங்கினார். அதன் பின் மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல்-ன் பங்குகளை வாங்கியது. தமிழகத்தில் தொடங்கப்பட்ட இந்த சேவை, படிப்படியாக நாடு முழுவதும் விரிவாக்கப்பட்டது., சுமார் 8.5 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டு இயங்கி வந்தது ஏர்செல் நிறுவனம். 

கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தனது சேவையை தொடங்கிய ஜியோ, பல்வேறு அதிரடி சலுகைகளையும், இலவசங்களையும் அறிவித்தது. இதனால் ஏராளமான வாடிக்கையாளர்கள் ஜியோ சேவைக்கு மாறினர். இதனால், ஏர்டெல், ஐடியா, வோடாபோன் ஆகிய நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதில் ஏர்செல் நிறுவனம் கடுமையாக பாதிக்கப்ப்டடது. 120 கோடி ரூபாயாக இருந்த லாபம், 5 கோடி ரூபாயாக சரிந்தது. இது தொடர்ந்து வந்த நிலையில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் ரூ.120 கோடி நஷ்டமாகியது. லாபம் ஈட்டப்படாத தொலைத்தொடர்பு வட்டாரங்களில் தனது சேவையை ஏர்செல் நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் நிறுத்தியது. மேலும் டவர் உரிமையாளர்களுக்கு பாக்கி செலுத்தாததால், ஏர்செல் நிறுவன டவர்கள் அணைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அது மட்டுமல்லாது ஏர்செல் நிறுவனத்தில் சுமார் 5000 பேர் பணியாற்றி வருகின்றன. அவர்களின் எதிர்காலம் என்ன என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்த நிலையில், ஏர்செல் நிறுவனம் முன்னறிவிப்பின்றி பல்வேறு இடங்களில் தனது சேவையை நிறுத்துவதாக புகார் எழுந்தது. அதைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் மொபைல் எண், போர்டபிலிட்டியில் வேறு நிறுவனத்துக்கு மாறுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏர்செல் வாடிக்கையாளர்கள் தங்களது சேவை முடக்கப்பட்டதை அடுத்து, ஏர்செல் நிறுவனத்தை வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் ஏர்செல் வாடிக்கையாளர்கள் ஒரேயொரு எஸ்எம்எஸ் அனுப்பி வேறு நிறுவன மொபைல் சேவைக்கு தங்களது எண்ணை மாற்றி சிரமத்திலிருந்து தப்பிக்க ஏர்செல் வழிவகை செய்துள்ளது. 

அதன்படி ஏர்செல் வாடிக்கையாளர்கள் செய்ய வேண்டியது , தங்களது மொபைல் செட்டிங்கில், நெட்வொர்க் செட்டிங் சென்று அங்கு நீங்களாகவே (Manually) நெட்வொர்க் சர்ச் செய்ய வேண்டும். அதில் காண்பிக்கப்படும் நெட்வொர்க்கில் ஏர்டெல் 2ஜியை தேர்வு செய்ய வேண்டும்.

பின்னர், PORT என டைப் செய்து, அத்துடன் உங்கள் மொபைல் எண்ணையும் சேர்த்து டைப் செய்து 1900 என்ற எண்ணிற்கு அனுப்பினால் போதுமானது. இதனால் மொபைல் போர்ட்டபிளிட்டி எண் உங்களுக்கு 24 மணி நேரத்தில் கிடைக்கும். 

அந்த எண் மூலம், நீங்கள் ஏர்டெல் மொபைல் சேவைக்கு மாறலாம். ஆனாலும் உங்ளது மொபைல் எண் மாறாது. பின்னர் வழக்கம்போல உங்களது எண்ணை நீங்கள் பயன்படுத்த தொடங்கலாம்.