இந்திய நகரங்கள் காற்று மாசினால் மிகவும் பாதிப்படைந்துள்ளதாக கூறப்படும் நிலையில், இதுகுறித்த தடுப்பு நடவடிக்கையை விரைவுபடுத்த வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்துள்ளது. 

காற்றுமாசு குறித்து யுனிசெஃப் வெளியிட்டுள்ள அறிக்கையில், காற்று மாசு குறித்தும், அதன் பாதிப்புகள் பற்றியும் அனைவருக்கும் ஒரு புரிதலை ஏற்படுத்தியிருக்கிறது. வெளிப்புற மற்றும் உட்புற காற்றின் மாசு காரணமாக ஒவ்வொரு ஆண்டும் 5 வயதிற்குட்பட்ட 6 லட்சம் குழந்தைகள் இறப்பதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.மலேரியா மற்றும் எய்ட்ஸ் மூலம் ஏற்படும் மரணங்களை விட இது அதிகம். 

அதேபோல், வட இந்தியா மற்றும் பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், சீனா உள்ளிட்ட அண்டை நாடுகளில் வசிக்கக்கூடிய குழந்தைகளில் 2 பில்லியன் குழந்தைகள் மோசமான காற்றை சுவாசிப்பதால் நுரையீரல், மூளை உள்ளிட்ட பகுதிகள் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுவதாக தெரிவிக்கின்றனா் மருத்துவர்கள்.

காற்று மாசு என்பது உலகளாவிய பிரச்சனை என்றாலும் இந்தியாவிலும் காற்று மாசு என்பது மிகவும் அதிகமாகவே இருக்கிறது. குறிப்பாக, தென்னிந்தியாவை காட்டிலும் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் காற்று மாசின் அளவு மிக அதிமாக இருக்கிறது. கடந்த ஜுன் மாதம் உலக சுகாதார நிறுவனம் உலகளவில் காற்று மாசடைந்த 20 நகரங்களின் பட்டியலை வெளியிட்டது. இதில் இடம்பெற்றிருந்த 10 இந்திய நகரங்களுமே வட இந்திய நகரங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஏற்கனவே காற்றின் மாசின் அளவு அதிகமாகி இருக்கக்கூடிய நிலையில் தற்போதாவது நடவடிக்கை எடுக்கத் தொடங்கினால் தான், இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளில் காற்று மாசுவை கட்டுப்படுத்த முடியும் என்கிறார் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். இயற்கையின் பரிசான காற்றை காசு கொடுத்து வாங்கி சுவாசிக்க ஆரம்பித்திருக்கின்றனர் சீனர்கள். நமக்கும் இது போன்ற ஒரு நிலைமை வருவதற்குள் விழித்துக்கொள்ள வேண்டியது நமது கையில் தான் இருக்கிறது.