குஜராத்தின் மேகனி நகரில் ஒரு விமானம் விபத்துக்குள்ளானது. விபத்துக்கான காரணம் தெரியவில்லை, விமானத்தில் 242 பயணிகள் இருந்திருக்கலாம்.

குஜராத்தின் மேகனி நகரில் ஒரு விமானம் விபத்துக்குள்ளானதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விமான விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் தெளிவான காரணம் தெரியவரவில்லை. விமானம் விபத்துக்குள்ளான இடம் ஒரு குடியிருப்பு பகுதி என்று கூறப்படுகிறது.

விபத்துக்குள்ளானது அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் என்றும் விமானத்தில் 2 விமானிகள், 10 ஊழியர்கள் உள்பட 242 பயணிகள் இருந்தனர் என்றும் கூறப்படுகிறது. இதனால், அந்தப் பகுதிக்கான அனைத்து சாலைகளும் மூடப்பட்டுள்ளன. விமான நிலையத்திலும் அனைத்து செயல்பாடுகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

Scroll to load tweet…

இதனை குஜராத் மாநில காவல்துறை கட்டுப்பாட்டு அறையும் ஏர் இந்தியா நிறுவனமும் உறுதி செய்துள்ளன. பிற்பகல் 1.30 மணி அளவில் புறப்பட்ட விமானம், திடீரென வேகத்தைக் குறைத்து கீழே விழுந்து நொறுங்கியுள்ளது. விபத்துக்குள்ளானது போயிங் நிறுவனம் தயாரித்த போயிங் 787-8 விமானம் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன.

உள்துறை அமைச்சர் அமித் ஷா விமான விபத்து குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். பிரதமர் நரேந்திர மோடி, விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடுவை தொடர்பு கொண்டு, அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்து சம்பவம் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட அகமதாபாத்திற்கு விரைந்து வருவதாக அமைச்சர் பிரதமரிடம் தெரிவித்தார்.

தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாக வழங்குவதை உறுதி செய்யுமாறும், மீட்புப் பணிகள் பற்றி தொடர்ந்து தகவல்களைப் பெறுமாறும் பிரதமர் உத்தரவிட்டுள்ளார் என அமைச்சர் ராம்மோகன் நாயுடுவின் அலுவலகம் கூறியுள்ளது.

Scroll to load tweet…

90 பேர் கொண்ட மீட்பு படையினர் சம்பவ இடத்தில் உள்ளனர். சேதத்தின் அளவைக் காட்டும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. விமானம் விழுந்த குடியிருப்புப் பகுதியில் இருந்து பிரமாண்ட தீப்பிழம்பு எழுவதையும், அதைத் தொடர்ந்து மிகப்பெரிய கரும்புகை கிளம்புவதையும் காணக் முடிகிறது.