Air-India Manager ceruppati the 25 Shiv Sena MP Anarchy

புது டெல்லியில் இந்திரா காந்தி விமானநிலையத்தில் ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் மேலாளரை 25 முறை செருப்பால் அடித்து, சிவசேனா எம்.பி.ரவிந்திர கெய்வாட் அராஜகத்தில் ஈடுபட்டுள்ளார். இவர் மீது ஏர் இந்தியா நிறுவனம் சார்பில் போலீசில் புகார் தரப்பட்டுள்ளது.

சிவசேனா கட்சியின் எம்.பி. ரவிந்திர கெய்க்வாட்(வயது57). ஏர் இந்தியா விமானத்தில் ‘ஓபன் டிக்கெட்’ முறையில், பிசினஸ் கிளாசில் கெய்க்வாட்டிக்கெட் முன்பதிவு செய்து இருந்தார். இந்நிலையில், புனேயில் இருந்து டெல்லிக்கு நேற்று காலை 7.35 மணிக்கு ஏ.ஐ.852 என்ற ஏர் இந்தியா விமானத்தில் ரவிந்திர கெய்க்வாட் பயணம் செய்தார்.

இந்த விமானம் முழுவதும் ‘எக்கானமி கிளாஸ்’ பிரிவாகும். டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கிய உடன் அனைத்து பயணிகளும் இறங்கிய நிலையில், எம்.பி. ரவிந்திர கெய்க்ட்வாட் இறங்கவில்லை.

இதையடுத்து ஏர் இந்தியா மேலாளர் சிவக்குமார் அங்கு வந்து எம்.பி.கெய்க்வாட்டை இறங்கக் கூறினார். அப்போது “தான் ‘பிஸ்னஸ் பிரிவில்’டிக்கெட் முன்பதிவு செய்து இருக்கையில் ‘எக்னாமி’ பிரிவில் ஏன் அமர வைத்தீர்கள்’’ என எம்.பி. கெய்க்வாட் வாக்குவாதம் செய்தார்.

அப்போது திடீரென எம்.பி. கெய்க்வாட், தனது காலில் போட்டு இருந்த செருப்பால் 25 முறை மேலாளர் சிவகுமாரை அடித்தது, அவரின் சட்டையையும் கிழித்ததாகக் கூறப்படுகிறது. அதன்பின் அங்கிருந்த ஊழியர்கள் வந்து சமாதானம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், “ ஏர் இந்தியா ஊழியரை எம்.பி. கெய்க்வாட் 20முறைக்கும் மேலாக செருப்பால் அடித்தது தொடர்பாக போலீசில் புகார் செய்துள்ளோம். அவர்கள் சிவகுமாரை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி, அந்த அறிக்கையின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்கிறோம் எனத் தெரிவித்தனர்.

அதுமட்டுமல்லாமல், எம்.பி. கெய்க்வாட் செய்த பிரச்சினையாலும், விமானத்தை விட்டு இறங்க மறுத்ததாலும், அந்தது விமானம் 40 நிமிடங்கள் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது. இது தொடர்பாகவும் புகார் செய்துள்ளோம்’’ என்றார்.

ஏர் இந்தியா ஊழியர் தாக்கப்பட்டது குறித்து உள்நாட்டு விமானப்போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ கூறுகையில், “ ஏர் இந்தியா விமான ஊழியர்கள் மீது இதுபோன்ற தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள முடியாது. இதை ஊக்கப்படுத்தவும் முடியாது. இதை கடுமையாக கண்டிக்கிறேன். முட்டாள் தனமான இந்த செயல் இனி நடக்கக் கூடாது'' என்றார்.

ஏர் இந்தியா ஊழியரை அடித்துவிட்டு மன்னிப்பு கேட்க மறுத்த சிவசேனாஎம்.பி. கெய்க்வாட் பேசுகையில், “ நான் சிவசேனா கட்சியின் உறுப்பினர்.பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் அல்ல. நான் மன்னிப்புகேட்க மாட்டேன்'' என்று தெரிவித்தார்.

ஏர் இந்தியா ஊழியர் சிவக்குமார் கூறுகையில், “ எம்.பி. கெய்க்வாட் என்னிடம் மரியாதைக் குறைவாக நடந்து, என்னைத் தாக்கினார். என் சட்டையைக் கிழித்து, எனது கண்ணாடியை உடைத்தார். இதுபோன்ற கலாச்சாரமும், நடத்தையும் கொண்ட எம்.பி.களிடம் இருந்து நாட்டை கடவுள்தான் காப்பற்ற வேண்டும். இவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்’’ எனத் தெரிவித்தார்.