டெல்லி எய்ம்ஸ் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி  செய்யப்பட்டுள்ளதையடுத்து அவருக்கு  தனி வார்டில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  

சீனாவின் பிறப்பிடமான கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளை அலறவிட்டு வருகிறது.  இதுவரை இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் நாளுக்கு நாள் உயிரிழப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது.  இந்நிலையில், இந்த வைரஸ் தொற்றை ஆரம்பித்திலேயே கிள்ளி எறிவதற்காக மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வந்தனர்.

இதனால், இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தது. இதுவரை 1965 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், 50 பேர் உயிரிழந்திருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் உடலியல் துறையின் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் புதிய தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவரது குடும்பத்தினர் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.