டெல்லி காங்கிரஸ் தலைவராக தேவேந்திர யாதவ் நியமனம்!
டெல்லி காங்கிரஸ் கமிட்டியின் இடைக்கால தலைவராக தேவேந்திர யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
டெல்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி தனது பதவியை அண்மையில் ராஜினாமா செய்தார். நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், டெல்லி காங்கிரஸ் தலைவர் திடீரென ராஜினாமா செய்துள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரவிந்தர் சிங் லவ்லி, தனது ராஜினாமா கடிதத்தை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அவர் தனது ராஜினாமா கடிதத்தில், “காங்கிரஸ் கட்சியின் மீது பொய்யான, இட்டுக்கட்டப்பட்ட மற்றும் தவறான ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துவதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சியின் டெல்லி பிரிவு எதிராக இருந்தது. இருப்பினும், ஆம் ஆத்மி கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்தது.” என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், டெல்லி காங்கிரஸ் கமிட்டியின் இடைக்கால தலைவராக தேவேந்திர யாதவை நியமனம் செய்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உத்தரவிட்டுள்ளார். பஞ்சாப் மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராகவும் அவர் தொடர்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாருக்கு வாக்களிக்க வேண்டும்? சிறையில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் சொல்லி அனுப்பிய செய்தி!
முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் டெல்லி மாநிலத் தலைவர் பதவியில் இருந்து மட்டுமே ராஜினாமா செய்வதாகவும், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகவில்லை எனவும் அரவிந்தர் சிங் லவ்லி தெளிவுபடுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.