புல்வாமா தாக்குதலுக்கு முக்கிய காரணமான அகமது கானை பாதுகாப்பு படை சுட்டு வீழ்த்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி  பயங்கர வாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள், 44 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது இயக்கம் பொறுப்பேற்றது

இந்த தாக்குதலில் ஈடுபட பயங்கரவாதிகளை பற்றிய விவரத்தை தேசிய புலனாய்வுப்பிரிவு உள்பட பல்வேறு அமைப்புகள் விசாரணை நடத்தி வந்தது. அதன் படி, முதாசிர் அகமது கான் என்கிற முகமது பாய், 23 வயதான இவர் தான் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டு வந்துள்ளதாக தெரிய வந்துள்ளது  

புல்வாமா தாக்குதலுக்கு தேவையான வாகனம் மற்றும் வெடிபொருளை ஏற்பாடு செய்து கொடுத்தும், பயங்கரவாதி அடில் அகமது தார் உடன் நெருக்கமாகவும் இருந்துள்ளான். ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தில் கடந்த ௨௦௧௭ ஆம் ஆண்டு இணைந்த இவர் இதற்கு முன்னதாக நடைபெற்ற சஞ்சுவான் ராணுவ முகாம், லெத்போரா சிஆர்பிஎப் முகாம்கள் மீதான தாக்குதலில் ஈடுபட்டும் தற்போது புல்வாமா தாக்குதலிலும் முக்கிய பணி ஆற்றி உள்ளார்
 
இந்நிலையில், டிரால் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் காணப்படுவதாக வந்த  தகவலை அடுத்து பாதுகாப்பு படையினர் 3 பயங்கர வாதிகளை சுட்டு வீழ்த்தினர். அதில் ஒரு நபர் அகமது கான் என்பது தெரியவந்துள்ளது.