கேரளாவில்  மீண்டும கனமழை தொடங்கியுள்ள நிலையில் மலப்புரம், இடுக்கி உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
கேரளாவில் கடந்த ஜூன் மாதம் தென் மேற்கு பருவமழை தொடங்கியது. முதலில் மிகக்குறைந்த அளவே மழைப் பொழிவு இருந்தது. அதன் பின்னர்  இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்தது.

 
இதனால் கேரளாவில் பல மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக மலப்புரம், கோழிக்கோடு போன்ற மாவட்டங்களில் பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டதால் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மழை வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான வீடுகளும் இடிந்தன. 
இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்தனர். கேரளாவில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு மழை குறைந்து இயல்புநிலை திரும்ப தொடங்கியதால் முகாம்களில் இருந்து மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பினார்கள்.

 
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஓய்ந்திருந்த மழை தற்போது மீண்டும் கொட்டி தீர்க்கத் தொடங்கியுள்ளது. இதனால் பல மாவட்டங்களுக்கு அவ்வப்போது எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. 
இந்த நிலையில் இன்று கேரளாவின் 5 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என திருவனந்தபுரம் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. 
பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டையம், இடுக்கி, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்யும் என்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுபோல நாளை கொல்லம், ஆலப்புழா, எர்ணாகுளம், இடுக்கி, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.