Medical Scam: ஆட்டோ ஓட்டுநரிடம் ஆசை காட்டி கிட்னியை பறித்த மோசடி கும்பல்; மருத்துவ அமைச்சர் எச்சரிக்கை
ஆந்திரா மாநிலத்தில் ரூ.30 லட்சம் தருவதாகக் கூறி ஆட்டோ ஓட்டுநரின் கிட்னியை எடுத்துக் கொண்ட மோசடி கும்பல் ரூ.1 லட்சம் மட்டும் கொடுத்து ஏமாற்றி உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திரா மாநிலம் குண்டூரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுந மதுபாபு (வயது 31). இவருக்கு மனைவி மற்றும் 4 வயதில் குழந்தை உள்ளது. ஆட்டோ ஓட்டுவதில் போதிய வருமானம் கிடைக்காததால் குடும்பம் நடத்த முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளார். இதனால் ஆன்லைன் மூலம் கடனும் பெற்றுள்ளார். ஆனால் அந்த கடனை அடைக்க முடியாமல் தவித்துள்ளார்.
இந்த நிலையில் பேஸ்புக் மூலம் அதே பகுதியைச் சேர்ந்த பாஷா (40) இவருக்கு அறிமுகமாகியுள்ளார். அவரிடம் மதுபாபு, தனது குடும்ப வறுமையை குறித்து கூறியபோது பாஷா, ஒரு கிட்னியை தானமாக கொடுத்தால் ரூ.30 லட்சம் வரை வாங்கி தருகிறேன்’ என கூறியுள்ளார். அதற்கு மதுபாபு சம்மதம் தெரிவித்துள்ளார். பாஷா மூலம் இடைத்தரகர் வெங்கட் (35) என்பவர் அறிமுகம் ஆனார்.
இதன்பின் விஜயவாடாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மதுபாபுவை பாஷா மற்றும் வெங்கட் ஆகியோர் அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் கிட்னி தேவைப்படும் நோயாளியின் உறவினரை அறிமுகம் செய்து வைத்தனர். நோயாளியின் உறவினர் முன்பணமாக மதுபாபுவிடம் ரூ.60 ஆயிரம் கொடுத்துள்ளார். மீதம் ரூ.29.40 லட்சத்தை ஆபரேஷன் முடிந்ததும் தருவதாக கூறியுள்ளார்.
கடந்த மாதம் ஜூன் 15ம் தேதி மதுபாபுவுக்கு அறுவை சிகிச்சை மூலம் அவரது வலது கிட்னி அகற்றப்பட்டது. முன்னதாக அவரிடம் இடது கிட்னியை அகற்றுவதாக கூறிய நிலையில் வலது கிட்னியை அகற்றியுள்ளனர். மயக்கம் தெளிந்த நிலையில் இதையறிந்து மதுபாபு அதிர்ச்சியடைந்தார். ஒப்பந்தப்படி ரூ.29.40 லட்சத்தை பாஷா உள்ளிட்டோரிடம் கேட்டார். அப்போது அவர்கள், `டிஸ்சார்ஜ் ஆகி சென்றபிறகு உங்கள் வீட்டுக்கு வந்து மீதி பணத்தை தருகிறோம்’ என்று கூறியுள்ளனர். ஆனால் பலமுறை கேட்டபிறகு சிறிது சிறிதாக மேலும் ரூ.50 ஆயிரம் கொடுத்துள்ளனர். மீதி பணத்தை கேட்டபோது தர மறுத்துள்ளனர்.
நேற்றுமுன்தினம் அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனைக்கு மதுபாபு சென்றுள்ளார். அங்கிருந்த பாஷா, வெங்கட் மற்றும் டாக்டர் சரத்பாபு ஆகியோரிடம் கேட்டதற்கு அவர்கள் அலட்சியமாக பதில் கூறியதோடு, `உனது கிட்னியை எடுக்க தெரிந்த எங்களுக்கு, உனது உயிரை எடுப்பது பெரிய விஷயமே இல்லை’ எனக்கூறி விரட்டிவிட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த மதுபாபு, குண்டூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தார்.
அண்ணாமலை என்ற வேதாளம் எங்களை விட்டு செல்வப்பெருந்தகை மீது ஏறியுள்ளது - ஜெயக்குமார் விமர்சனம்
அதில், ‘’தன்னைப்போல் அதே மருத்துவமனையில் 10க்கும் மேற்பட்டோரை வரவழைத்து கிட்னியை அகற்றி சில ஆயிரம் மட்டுமே கொடுத்து விரட்டுகின்றனர். எனவே டாக்டர், இடைத்தரகர் உள்ளிட்ட அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்று தெரிவித்திருந்தார். இதன்படி பாஷா, வெங்கட், டாக்டர் சரத்பாபு மற்றும் நோயாளியின் உறவினர் ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
அமைச்சர் எச்சரிக்கை
இது தொடர்பாக ஆந்திர மாநில உள்துறை அமைச்சர் அனிதா தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் கூறியிருப்பதாவது, விஜயவாடாவில் சிறுநீரக மோசடி நடந்திருப்பதாக புகார் வந்துள்ளதை கேட்டறிந்தேன். இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வருங்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.