இதோடு அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த போலீஸ் அதிகாரியான சித்தார்த் சவுத்ரி துப்பாக்கிச் சூட்டில் சிக்கி காயமடைந்தார். 

ரம்ஜான் பண்டிகையின் போது வன்முறை ஏற்படக் கூடாது என்ற காரணத்தால் மத்திய பிரதேச மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. 

மத்திய பிரதேச மாநிலத்தின் கார்கோன் பகுதியில் ரம்ஜான் பண்டிகையை ஒட்டி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. கடந்த மாதம் ராம நவமி பண்டிகையின் போது வன்முறை வெடித்ததை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தவு பிறப்பிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்து இருக்கிறது. 

முழு ஊரடங்கு:

"கார்கோன் மாவட்டத்தில் மே 2 மற்றும் மே 3 ஆகிய தேதிகளில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட இருக்கிறது. ஊரடங்கு காரணமாக ரம்ஜான் தொழுகைகளை வீட்டில் இருந்தபடி செய்து கொள்ளுங்கள்," என கார்கோன் மாவட்டத்தின் கூடுதல் மாஜிஸ்டிரேட் சம்மர் சிங் தெரிவித்து இருக்கிறார். "ஊரடங்கின் போது கடைகள் திறந்தே இருக்கும். மாணவர்கள் பரீட்சை எழுத செல்லும் பட்சத்தில் அதற்கான அனுமதி வழங்கப்படும்," என அவர் மேலும் தெரிவித்தார். 

"ஊரடங்கு மட்டும் இன்றி கார்கோன் மாவட்டத்தில் அக்‌ஷய திருதியை மற்றும் பரசுராம் ஜெயந்தி கொண்டாட்ட நிகழ்வுகள் எதற்கும் அனுமதி அளிக்கப்பட மாட்டாது." என சம்மர் சிங் தெரிவித்து இருக்கிறார். 

ராம நவமி வன்முறை:

கடந்த ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி கார்கோன் மாவட்டத்தில் நடைபெற்ற ராம நவமி கொண்டாட்டத்தின் போது இரு பிரிவினர் இடையே மோதலே ஏற்பட்டது. இதில் 24 பேர் காயமுற்றனர். மேலும் வன்முறை தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். இதோடு அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த போலீஸ் அதிகாரியான சித்தார்த் சவுத்ரி துப்பாக்கிச் சூட்டில் சிக்கி காயமடைந்தார். 

ஆனந்த் நகர் கபாஸ் மண்டி பகுதியை சேர்ந்த இப்ரிஸ் கான் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். மூத்த போலீஸ் அதிகாரியை துப்பாக்கியால் சுட்ட விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இதுதவிர கார்கோன் மாவட்டம் முழுக்க வன்முறையில் ஈடுபட்ட 64 வழக்குகளில் தொடர்புடைய 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

முன்னெச்சரிக்கை நடவடிக்கை:

வன்முறையை தொடர்ந்து பண்டிகை காலக்கட்டங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய பிரதேச அரசு உத்தரவிட்டு உள்ளது. ரம்ஜான் மட்டும் இன்றி அம்பேத்கர் பிறந்த தினம், மகாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி மற்றும் அனுமன் ஜெயந்தி போன்ற விழாக்களின் போதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.