விளையாட்டு அரங்கில் ஏற்பட்ட தீ விபத்து.. 24 பேர் பலியான சம்பவம்.. குஜராத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..
குஜராத்தின் ராஜ்கோட் நகரில் உள்ள கேமிங் சோனில் இன்று (சனிக்கிழமை) மாலை ஏற்பட்ட பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 24 பேர் இறந்துள்ளனர்.
குஜராத்தின் ராஜ்கோட் நகரில் உள்ள கேமிங் சோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 24 பேர் பலியாகினர். இச்சம்பவம் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்கோட் போலீஸ் கமிஷனர் ராஜு பார்கவ், “இன்று பிற்பகலில் டிஆர்பி கேமிங் மண்டலத்தில் தீ விபத்து ஏற்பட்டது. மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தீ கட்டுக்குள் உள்ளது. முடிந்தவரை உடல்களை மீட்க முயற்சி செய்து வருகிறோம்” என்றார்.
தற்போது சுமார் 20 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்படும். கேமிங் மண்டலம் யுவராஜ் சிங் சோலங்கி என்ற நபருக்கு சொந்தமானது. கவனக்குறைவு மற்றும் நிகழ்ந்த இறப்புகளுக்கு நாங்கள் குற்றத்தைப் பதிவு செய்வோம். இங்கு மீட்புப் பணிகள் முடிந்தவுடன் அடுத்தகட்ட விசாரணை நடைபெறும்” என்று கூறினார்.
முதல்வர் பூபேந்திர படேல், விளையாட்டு மண்டலத்தில் உடனடி மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள நகர நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று ட்வீட் செய்துள்ளார். “ராஜ்கோட்டில் விளையாட்டு மண்டலத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உடனடி மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்காக மாநகராட்சி மற்றும் நிர்வாகத்திற்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
காயமடைந்தவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளுக்கு முன்னுரிமை அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று முதல்வர் பூபேந்திர படேல் தெரிவித்துள்ளார். இந்த தீயை கட்டுப்படுத்தவும், உள்ளே சிக்கியவர்களை மீட்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.