பீகாரில் 110 அடியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது பெண் குழந்தை 29 மணிநேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். பீகார் மாநிலம் மங்ஹார் மாவட்டத்தில் விவசாய நிலத்தில் ஆழ்துளை கிணற்றில் சானா என்ற 3 வயது பெண் குழந்தை தவறி விழுந்தது. 

தகவலறிந்த தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் பெண் குழந்தையை மீட்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டனர். அப்பகுதிக்கு மருத்தவ குழுவும் விரைந்தது. மீட்பு பணியின் போது சிறுமிக்கு அவ்வபோது தேவையான உணவு மற்றும் ஆக்சிஜன் அனுப்பப்பட்டது.

 

அவரை தொடர்ந்து கண்காணிக்க சிசிடிவி பொருத்தப்பட்ட கேபிளும் உள்ளே அனுப்பப்பட்டது. பெற்றோர் அவ்வபோது சிறுமிக்கு தைரியம் அளித்தனர். 

பின்னர் 29 மணிநேர போராட்டத்திற்கு நேற்று இரவு குழந்தையை மீட்டனர். தயார் நிலையில் இருந்த மருத்துவக்குழுவினர் சிறுமிக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுமி சானா உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.