குருத்வாராக்கள், கோயில்களைப் பராமரிப்பதற்கு தகுந்த பாதுகாப்பு, உதவியை வழங்க ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து மாகாணங்களுக்கும் உத்தரவு பிறப்பிக்குமாறு அவரிடம் கேட்கப்பட்டது.

நற்பெயருக்கு சேதம் ஏற்படுவது குறித்த கவலைகள் இருந்தபோதிலும், தாலிபானின் தற்போதைய வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தகிக்கு சிவப்பு கம்பளம் விரிக்க இந்தியா முடிவு செய்துள்ளது. ஏன் இந்த மாற்றம்? நடைமுறைவாதத்தில் இருந்து பிராந்திய ஸ்திரத்தன்மை வரை, இந்தியாவின் நகர்வை இயக்குவது இதுதான். தற்போது இந்தியாவிற்கு ஒரு வார கால பயணமாக வந்துள்ளளார் ஆப்கானிஸ்தான் அமைச்சர் முத்தகி.

இந்நிலையில், மதத் துன்புறுத்தலில் இருந்து தப்பிக்கவும், தனிப்பட்ட பாதுகாப்பிற்காகவும், இந்தியாவில் தஞ்சம் புகுந்த ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்களின் குழு ஆப்கானிஸ்தான் தூதரகத்தில் தலிபான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தகியை சந்தித்துப் பேசினர்.

இந்த சந்திப்பு அதில் கலந்து கொண்ட டெல்லி மனோகர் நகரில் உள்ள குருத்வாரா குரு நானக் சாஹிப் ஜியின் தலைவர் குல்ஜீத் சிங் கூறுகையில், ‘‘தலிபான் ஆட்சியில் சொத்துக்கள், மதத் தலங்களின் பாதுகாப்பையும் உறுதி செய்தால் மட்டுமே தாங்கள் ஆப்கானிஸ்தானுக்குத் திரும்ப முன் வருவோம். ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு சிறுபான்மை சமூகத்தின் வெளியேற்றம் 1992-ல் தொடங்கியது. தற்போது அங்கிருந்து சுமார் 5,000 சீக்கியர்கள்,இந்துக்கள் இந்தியாவில் வசிக்கின்றனர் என்றும் சிங் கூறினார்.

ஆகஸ்ட் 2021-ல் தாலிபான்கள் கைப்பற்றிய பின்னர் அவசர விசாக்களில் இந்தியாவால் வெளியேற்றப்பட்ட 276 சீக்கியர்களும் இங்கு வந்த பிறகு கனடாவுக்கு குடிபெயர்ந்ததாக அவர் கூறினார். "கனடா ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களுக்கு தஞ்சம் அளித்ததால், இந்திய அரசால் வெளியேற்றப்பட்ட பிறகு அவர்கள் அனைவரும் அங்கு சென்றனர். மதத் தலங்களைப் பாதுகாப்பது குறித்த பிரச்சினையை எழுப்புவதற்காகவே தூதுக்குழு முத்தகியைச் சந்திக்க நேரம் கோரினோம்.

ஆப்கானிஸ்தான் சீக்கியர்களும் இந்துக்களும் தங்கள் நாட்டிற்குத் திரும்ப வேண்டும் என்று அமைச்சர் ஆர்வமாக இருந்தார். ஆனால் பாதுகாப்பு உறுதி செய்யப்படாவிட்டால் அது சாத்தியமில்லை. குருத்வாராக்களைப் பாதுகாக்க சுமார் 20-25 சீக்கியர்கள் இன்னும் ஆப்கானிஸ்தானில் உள்ளனர். அங்கு இரண்டு இந்து குடும்பங்கள் மட்டுமே உள்ளன.

இந்தியாவில் ஆப்கானிஸ்தான் சமூகத்திற்கு உதவும் இந்திய உலக மன்றத்தின் தலைவர் புனித் சிங் சந்தோக், ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துக்கள், சீக்கியர்களின் வரலாறு, அவர்களின் தற்போதைய மக்கள்தொகை குறித்து முத்தகிக்கு தூதுக்குழு தெரிவித்தது’’ எனக் கூறினார் சிங்.

வரலாற்று குருத்வாராக்கள், கோயில்களை மீட்டெடுப்பதற்கும் பராமரிப்பதற்கும் இந்தியாவில் இருந்து முக்கிய இந்துக்கள் மற்றும் சீக்கியத் தலைவர்களின் கூட்டுக் குழு ஆப்கானிஸ்தானுக்கு வருகை தர வசதி செய்யுமாறு உறுப்பினர்கள் அமைச்சரிடம் கேட்டுக்கொண்டனர். முந்தைய ஆட்சியின் போது சிறுபான்மையினருக்கு அரசில் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டதைப் போலவே, ஆப்கானிஸ்தான் அரசில் உயர் பதவிகளில் இந்து, சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த தலா இரண்டு பேர் நியமிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த, இந்தியாவில் உள்ள தங்கள் பணியில் ஆப்கானிஸ்தான் இந்துக்கள், சீக்கியர்களை நியமிப்பது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் உறுப்பினர்கள் பரிந்துரைத்தனர்.

சிறுபான்மையினரின் சொத்துரிமைகள் மற்றும் சொத்துக்களை மீட்டெடுப்பதை உறுதி செய்ய அமைச்சரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது. குருத்வாராக்கள், கோயில்களைப் பராமரிப்பதற்கு தகுந்த பாதுகாப்பு, உதவியை வழங்க ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து மாகாணங்களுக்கும் உத்தரவு பிறப்பிக்குமாறு அவரிடம் கேட்கப்பட்டது.

இந்நிலையில், ‘‘ஆப்கானிஸ்தானில் இந்துக்களின் சொத்துரிமை மீட்டெடுக்கப்படும் என இந்தியா வந்துள்ள அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் முத்தாக்கி உறுதி அளித்துள்ளார். குருத்வாராக்கள் மற்றும் ஆலயங்களை பராமரிப்பதற்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.