சமீபத்தில் காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டு வந்த சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது. இதன் மூலம் தற்போது அங்கு மற்ற மாநிலத்தவர்களும் குடியேறலாம், சொத்து வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, லடாக் மற்றும் காஷ்மீரில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அப்போதே தெரிவித்தார்.

இந்நிலையில் மதுரை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த வக்கீல் முத்துக்குமார், காஷ்மீரில் நிலம் வாங்க அனுமதி கேட்டு உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடுதாசி போட்டுள்ளார். அதில், ”நான் ஒரு பாஜக தொண்டனாகக் காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை மகிழ்ச்சியாகக் கொண்டாடுகிறேன். சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதற்கு காரணமாக இருந்த பிரதமர் மோடிக்கும் ,அமித்ஷாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 

மற்ற மாநில மக்கள் காஷ்மீரில் குடியேறும் வகையில் மத்திய அரசு சில வழிமுறைகளை வகுக்கும் என்று நம்புகிறேன். சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதன் மூலம் மற்ற மாநிலத்தவர்களும் அங்கு நிலம் வாங்கலாம் என்ற அடிப்படையில் நானும் அங்கு நிலம் வாங்கி குடியேற விரும்புகிறேன். அதன்படி தென் மாநிலங்களிலிருந்து காஷ்மீரில் நிலம் வாங்கிய முதல் பாஜக உறுப்பினர் என்ற பெருமையைப் பெற விரும்புகிறேன். எனவே காஷ்மீரில் நிலம் வாங்க வேண்டும் என்ற எனது கோரிக்கையைப் பரிசீலிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்

மேலும், இந்தியர்கள் அமெரிக்கா, லண்டனில் கூட சொத்து வாங்கலாம். ஆனால் நம் நாட்டில் உள்ள காஷ்மீரில் நிலம் வாங்கும் நிலை இல்லாமல் இருந்தது. இந்நிலை தற்போது மாறியுள்ளதால் அங்கு நிலம் வாங்க வேண்டுமென்ற ஆவல் ஏற்பட்டுள்ளது. காஷ்மீரில் நிலப்பரப்பு அதிகம் என்றாலும், அங்கு மக்கள் தொகை என்பது குறைவுதான். எனவே காஷ்மீரில் குடியேற விரும்புகிறேன். நான் ஒரு வழக்கறிஞர் என்பதால் எனது சட்டப்பணியை அங்கு தொடருவேன் என்று கூறியுள்ளார்.