கணவனை ஏமாற்றிவிட்டு தனது காதலனுடன் உடலுறவு வைத்துக் கொள்ளும் பெண்களை தண்டிக்க இந்திய சட்டத்தில் இடம் இல்லை என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.  கள்ளக்காதலில் ஈடுபடும் மனைவிக்கு எதிராக ஒரு கணவன் புகார் கொடுத்தால் அவனது மனைவியுடன் உடலுறவு வைத்துக் கொண்ட ஆணுக்கு மட்டுமே தண்டனை கொடுக்கப்படுவதாகவும், மேலும் கணவன் கள்ளக்காதலில் ஈடுபட்டால் மனைவியால் புகார் கொடுக்க முடியாத நிலை இருப்பதாகவும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆண் – பெண் சமத்துவத்திற்கு எதிரானதாக இருக்கும் ஐ.பி.சி 497வது பிரிவை நீக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற மூன்று நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கள்ளக்காதல் விவகாரத்தில் ஆண் – பெண் சமத்துவம் இல்லையே ஏன் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த மத்திய அரசு வழக்கறிஞர், செக்சன் 497ன் படி, மற்றொரு ஆணின் மனைவியுடன் அந்த ஆணின் சம்மதம் இல்லாமல் உடலுறவு வைத்துக் கொள்ளும் ஆண் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும். மேலும் அந்த ஆண் மீதான புகார் உறுதி செய்யப்பட்டால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க முடியும். இந்த விவகாரத்தில் பெண் குற்றத்திற்கு தூண்டியவராக கருத முடியாது என்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசின் வழக்கறிஞர் தெரிவித்தார். மேலும் கள்ளக்காதலில் ஈடுபடும் பெண்கள் குறித்து சட்டத்தில் எந்த இடத்திலும் தெரிவிக்கப்படவில்லை என்றும், எனவே கள்ளக்காதலில் ஈடுபடும் பெண்களை தண்டிக்க சட்டத்தில் இடம் இல்லை என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. வேண்டும் என்றால் இந்த விவகாரத்தில் தலையிட்டு உச்சநீதிமன்றம் ஒரு தீர்வை வழங்கலாம் என்றும், அதற்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்றும் வழக்கறிஞர் குறிப்பிட்டார்.  இதை அடுத்து வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.