கேரள அரசின் மது கொள்கைகளுக்கு எதிராகவும், மது ஆலைகளுக்கு ஆதரவாகவும் செயல்பட்டுவந்த பேஸ்புக் குழுவின் அட்மின்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பேஸ்புக் குழுவுக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்று கூறி தம்பதியர், முன் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த தம்பதியர் அஜீத்குமார் - வினிதா.  'கிளாஸிலே நுரையும் பிளேட்டிலே கறியும்' என்ற தலைப்பில் பேஸ்புக் குழு
ஒன்றை தொடங்கியுள்ளனர். இந்த பேஸ்புக் குழுவில் 18 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். மது போதையை வலியுறுத்தியும், குடிப்பழக்கத்தை ஆதரித்தும் தங்களது கருத்துக்களை பேஸ்புக் குழுவில் பதிவிட்டு வந்துள்ளனர்.

அதே நேரத்தில், மதுவுக்கு எதிராக கேரள அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை எதிர்த்தும் இந்த பேஸ்புக் குழுவில் கருத்துக்கள் பதிவிடப்பட்டு வந்துள்ளன. மதுபானம் நிறைந்த கோப்பையின் அருகில் ஒரு வயது குழந்தை அமர்ந்திருப்பதுபோல சர்ச்சைக்குரிய படம், பேஸ்புக்-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கேரள கலால் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தொடர்பான பிரிவின்கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே அஜீத்குமார் - வினிதா தலைமறைவாகினர். அவர்களைப் போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில், அஜீத்குமார்-வினிதா சார்பாக
திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

'கிளாஸிலே நுரையும் பிளேட்டிலே கறியும்' என்ற பெயரில் பேஸ்புக்கில் போலியாக குழு தொடங்கப்பட்டுள்ளது. அதற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. மதுபோதையை வலியுறுத்தும் அத்தகைய குழுக்கள் மீது நீதிமன்றம் உரிய விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தமே இல்லாமல் தங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதால், போலீசாரின் கைது நடவடிக்கையில் இருந்து பாதுகாக்க முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று அந்த தம்பதியர் மனுவில் தெரிவித்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணை விரைவில் நீதிமன்றத்திற்கு வர உள்ளது.