adityanath implements new laws in uttarpradesh

கோர்க்பூர் தொகுதியில் எம்.பி. அலுவலகத்தில் தொடர்ந்து டெலிபோன் மணி ஒலித்துக்கொண்டே இருக்கிறது. மக்கள் கையில் மனுக்களுடன், மனதில் குறைகளுடன் வரிசையில் காத்திருக்கிறார்கள். அவர்களை கொஞ்சம் கூட உதாசீனப்படுத்தாமல் குறைகளைக் கேட்டறிந்து தீர்த்து வருகிறார் புதிய முதல்வர் யோகி ஆதித்யநாத்.

“நான் தொகுதியில் இல்லாவிட்டாலும் என்னைச் சந்தித்து குறைகளை தெரிவிக்க வரும் மக்கள் வெறும் கையில் போகக்கூடாது. அவர்களுக்கு தீர்வு கிடைக்கவேண்டும்” என்று அதிகாரிகளுக்கு முதல்வர் ஆதித்யநாத் உத்தரவிட்டு, மக்கள் ஆதரவை அள்ளிவருகிறார்.

கடந்த 19-ந்தேதி முதல்வர் பதவியில் அமர்ந்ததில் இருந்து தனது கோரக்பூர் தொகுதியில் காலை 9 மணி முதல் 11 மணிவரை மக்கள் குறைகேட்கும் நேரம் என்று ஒதுக்கியுள்ளார் முதல்வர் ஆதித்யநாத்.

இங்கு வரும் மக்களை சாதி, மதம் பார்க்காமல் அனைவரின் குறைகளையும் நேரடியாகவோ, அல்லது தொலைபேசி மூலமோ தீர்த்து வைத்து வருகிறார்.

கோரக்பூர் கோயிலின் மடாதிபதியாகவும் முதல்வர் ஆதித்யநாத் இருந்து வருகிறார். அந்த கோயிலின் துணைக்கண்காணிப்பாளர் துவாரிகா திவாரி கூறுகையில், “ மகாராஜா(முதல்வர் ஆதித்யநாத்தை அப்படித்தான் அழைக்கிறார்கள்)முதல்வராக பொறுப்பு ஏற்றதில் இருந்து அவரைச் சந்தித்து குறைகளை தெரிவிக்க மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மக்கள் வருகிறார்கள். 

சிலநேரம் தன்னால் நேரடியாக உதவி செய்யமுடியாவிட்டாலும்கூட தொலைபேசி மூலமோ, கடிதம் மூலமோ, பணமாகவோ உதவிசெய்து வருகிறார் மகாராஜா.

தான் இல்லாவிட்டாலும் தன்னைச் சந்திக்க வரும் மக்கள் வெறும் கையுடன் செல்லக்கூடாது என்பதற்காக தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார். இதில் சாதி, மதம் வேறுபாடுகளை அவர் பார்ப்பதில்லை” என்று தெரிவித்தார்.

ரபிபுல்லா அன்சாரி என்ற முஸ்லிம், துணிநெய்தல் வேலை செய்து வருகிறார். அவரின் மகள் சமீபத்தில் ஒரு விபத்தில் சிக்கியதையடுத்து, மருத்துவச் செலவுக்கு பணம் தேவைப்பட்டுள்ளது.

உடனே முதல்வர் ஆதித்யநாத்தின் அலுவலகத்துக்கு நேரில் சென்று தனது குறைகளைத் தெரிவித்துள்ளார். அவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய முதல்வர் ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

 இது குறித்து ரபிபுல்லா அன்சாரி கூறுகையில், “என் மகளுக்கு செலுத்த வேண்டிய மருந்தின் விலை அதிகம் என மருத்துவர்கள் கூறிவிட்டனர். இதனால், முதல்வர் ஆதித்யநாத்தை அவரின் இல்லத்தில் சந்திக்க சென்றேன்.

என் குறைகளைக் கேட்ட அவர், உடனடியாக அந்த மருத்துவமனை நிர்வாகத்தை தொடர்பு கொண்டு சிகிச்சை அளிக்க அனைத்து உதவிகளையும் செய்தார். அவர் என்னை முஸ்லிம் என பாகுபாடு பார்க்கவில்லை” என்றார்.

முதல்வர் ஆதித்தியநாத் தொகுதி அலுவலகம் முன் தட்டச்சு செய்து பிழைப்பு நடத்திவரும் வீரேந்திர சிங் கூறுகையில், “ முதல்வர் ஆதித்யநாத் தன்னை சந்திக்க வரும் மக்களை அவர் பாகுபாடு பார்த்தது இல்லை.

அனைவருக்கும் உதவி செய்து வருகிறார். அவர் முதல்வராக வந்தபின் மக்கள் கூட்டம் அதிகமாக வருகிறது. மனுக்கள் மூலம், இணையதளம் மூலம், தொலைபேசி மூலம் மக்கள் குறைகளை தெரிவித்து தீர்வுகளைப்பெற்று வருகிறார்கள்” என்று தெரிவித்தார்.