உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளிகள் அனைத்தும் தாங்கள் மாணவர்களிடம் எவ்வளவு கட்டணம் வசூலிக்கிறோம், ஆசிரியர்களுக்கான ஊதியம் எவ்வளவு?, கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட  விவரத்தை 15 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்று முதல்வர்ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். 

பா.ஜனதா ஆட்சி

உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பாரதிய ஜனதா கட்சி 15 ஆண்டுகளுக்கு பின் ஆட்சியைப் பிடித்துள்ளது. கோரக்பூர் எம்.பி. யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவி ஏற்றதில் இருந்து மாநிலத்தின் வளர்ச்சிக்காக புதிய திட்டங்களை அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

புகார்கள்

இந்நிலையில், மாநிலத்தில் தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் இருந்து அதிகமான கட்டணம் வசூலிக்கிறார்கள் என்றும், போதுமான வசதிகள் இல்லை என்று அரசுக்கு மக்கள் தரப்பில் புகார்கள் சென்றன. 

15 நாட்களுக்குள்

இதையடுத்து, மாநிலக் கல்வித்துறை அமைச்சர், அதிகாரிகளுடன் முதல்வர் ஆதித்யநாத்ஆலோசனை நடத்தினார். அதன்பின், அடுத்த 15 நாட்களுக்குள் தனியார் பள்ளிகள் தங்களின் கட்டண விவரம், ஆசிரியர்களுக்கு ஊதியம் உள்ளிட்ட விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

சுற்றரிக்கை

இது தொடர்பாக  பள்ளி கல்வித்துறை இயக்குநர் உமேஷ் திரிபாதி, அனைத்து தனியார் பள்ளிகளின் முதல்வர்கள்,  தனியார் பள்ளிகளின் பிரதிநிதிகள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தி, சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். 

ஊதியம்

அந்த அறிக்கையில்,  கடந்த 1990ம் ஆண்டு உத்தரப்பிரதேச அரசு பிறப்பித்த உத்தரவின்படி, தனியார் பள்ளிகள், அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இணையாக ஊதியம் தர வேண்டும் சிறந்த கட்டமைப்பு வசதிகள், ஆண்டுதோறும் ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு உள்ளிட்ட சலுகைகளையும் தனியார் பள்ளிகள் அளிக்க வேண்டும். இந்த வசதிகள் அனைத்தும் தனியார் பள்ளிகளில் இருக்கிறதா? அது குறித்து அறிக்கை அளிக்க வேண்டும்.

அடிப்படை வசதிகள்

மக்கள் வரிப்பணத்தில் இருந்து அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர் ஒருவருக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.2,300 செலவு செய்யப்படுகிறது. அதேசமயம், தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கிறார்கள். ஆதலால், மாணவர்களுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்தும் அறிக்கை அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.