உத்திரப்பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவி ஏற்றதில் இருந்து, அவர் பிறப்பித்த அதிரடி உத்தரவுகளால், அதிகாரிகளும், ஊழியர்களும், ர்வாகமும் தலைகீழாக மாறிவிட்டது.

சரியான நேரத்துக்கு அரசு ஊழியர்கள் பணிக்கு வருகிறார்கள், குறித்த இடத்தில் வாகனங்களை நிறுத்துகிறார்கள், பான்மசாலா, குட்கா மெல்வதைத் தவிர்த்து சாக்லேட், சூவிங்கம் மெல்கிறார்கள். 

தேநீர் இடைவேளையில் மட்டுமே வெளியே செல்கிறார்கள், அலுவலகத்தை குப்பையின்றி, படுசுத்தமாக வைத்து இருக்கிறார்கள்.

இந்த சம்பவங்களைப் பார்ப்பவர்கள் உத்தரப்பிரசேதத்தில் தான் இருக்கிறோமோ? என்று சந்தேகத்தை எழுப்பிடும். அந்த அளவுக்கு அதிகாரிகளும், நிர்வாகமும் மாற்றம் அடைந்துள்ளன.

இதுகுறித்து லக்னோவில் தலைமைச்செயலகத்தில் வேலைசெய்யும் பியூன் ஒருவர் கூறுகையில், “வழக்கமாக 10-மணிக்குமேல் தான உயர்அதிகாரிகள் பணிக்கு வருவார்கள். அதிலும் சிலர் வாயில் பான்மசாலா, குட்கா மென்று கொண்டே இருப்பார்கள். 

ஆனால், கடந்த 10 நாட்களாக எல்லாமே மாறிவிட்டது. முதல்வர் ஆதித்யநாத் பிறப்பித்த உத்தரவுக்கு பின், காலை 9.30 மணிக்கே அதிகாரிகள் வந்துவிடுகிறார்கள், முன்புபோல் வாயில் குட்கா, பான்மசாலா மெல்லாமல், சாக்லேட், பபுள்கம் சாப்பிடுகிறார்கள்.

அதிலும் அந்த சாக்லேட், பபுல்கம் பேப்பரை கீழே போடாமல், அதை அவர்களின் பைகளுக்குள் போட்டுக் கொள்கிறார்கள். இந்த மாற்றம் நன்றாக இருக்கிறது. எந்த அதிகாரியும் விடுமுறையே எடுக்கவில்லை” என்றார்.

அதுமட்டுமல்லாமல், தலைமைச் செயலகத்தில் ஒவ்வொரு துறையிலும் மாநில வனத்துறை சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அதில் “ நீங்கள் கண்காணிப்பு கேமிராவால் கண்காணிக்கப்படுகிறீர்கள்.

பான்மசாலா, குட்கா மென்றால், ரூ.1000 அபராதம் செலுத்த வேண்டும்” என எழுதப்பட்டுள்ளதால், அலுவலகத்தை அதிகாரிகளும், ஊழியர்களும் மிக சுத்தமாக பராமரித்து வருகிறார்கள்.

அதிகாரிகள் 18முதல் 20மணிநேரம் வரை பணி செய்ய தயாராக இருக்க வேண்டும், வீட்டுக்கு அலுவலக கோப்புகளை எடுத்துச்செல்லக்கூடாது என முதல்வர் ஆதித்யநாத் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அதிகாரிகள் வருகைப்பதிவேடு நிறைந்து இருக்கிறது.

மாநிலத்தின் நீர்பாசனத்துறை அமைச்சர் உபேந்திர திவாரி தனது அலுவலகத்துக்கு காலை 9.30 மணிக்கு வந்துவிடுகிறார். இதனால், தனது துறையில் பணிபுரியும் அதிகாரிகள்,ஊழியர்களையும் காலை 9.30 மணிக்கு முன்பாக வந்துவிடவேண்டும், அலுவலகத்தை சுத்தமாக வைத்து இருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.இதனால், அலறியடித்து, ஊழியர்கள் ஓடிவருகிறார்கள்.  

இதேபோல கேபினெட் அமைச்சர்களான எஸ்.பி.எஸ். பாகேல், சுரேஷ் ரானா, ஸ்வதந்திரா தியோ சிங், சூர்யா பிரதாப் சாகி, தரம்பால் சிங், சுரேம் கண்ணா, அனுபமா ஜெய்ஸ்வால், நீல்காந்த் திவாரி உள்ளிட்டோர் காலை 9.30 மணிக்கே தலைமைச் செயலகத்தில் அஜராகிவிடுகிறார்கள். 

அமைச்சர்களே 9.30 மணிக்கு வந்துவிடுகிறார்கள் என்ற பயத்தால், அதிகாரிகளும், ஊழியர்களும் அலறியடித்துக்கொண்டு 9.30மணிக்கு முன்பாகவே அலுவலகம் வந்துவிடுகிறார்கள். மேலும், அலுவகத்தில் எந்தவிதமான தூசு படியாமல், குப்பைகள் இல்லாமல், பான்மசாலா,குட்கா மென்று துப்பாமல் அதிகாரிகளும், ஊழியர்களும் உற்சாகத்துடன் பணிபுரிவதை காணமுடிகிறது.

அனைத்தும் ஆதித்யநாத் கொண்டு வந்த மாற்றம்தான்..