L1 புள்ளியை நாளை சென்றடையும் ஆதித்யா விண்கலம்: தயார் நிலையில் இஸ்ரோ!
ஆதித்யா L1 விண்கலம் நாளை மாலை L1 புள்ளியை சென்றடையும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்
சந்திரயான்-3 தரையிறக்கத்தின் மூலம் வரலாற்றுச் சாதனை படைத்துள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, அடுத்ததாக சூரியனை ஆராய்ச்சி செய்யும் ரூ.424 கோடி மதிப்பிலான ஆதித்யா எல்1 செயற்கைகோளை விண்ணுக்கு அனுப்பியுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹிரிகோட்டா சதீஸ்தவான் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி எக்ஸ்எல் சி57 ராக்கெட்டின் மூலம் ஆதித்யா எல்1 செயற்கைகோள் கடந்த ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.
பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டுமையத்தில் இருந்து அதன் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. ஆதித்யா எல்1 செயற்கைகோள் மொத்தம் 7 பேலோடுகளை சுமந்து சென்றுள்ளது. இதில் 4 பேலோடுகள் சூரியனை நேரடியாக ஆய்வு செய்யும். 3 பேலோடுகள் சூரியனின் வெளிப்பகுதி, துகள்கள், எல்-1 பகுதி உள்ளிட்டவற்றை ஆய்வு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பூமியில் இருந்து சுமார் 15 லட்சம் கி.மீ தொலைவில் உள்ள லேக்ரேஞ் புள்ளியை (L1) ஆதித்யா எல்1 செயற்கைகோள் ஏவப்பட்ட நாளில் இருந்து அடைய 125 நாட்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், புவியில் இருந்து 15 லட்சம் கி.மீ தொலைவில் உள்ள சூரியனின் எல்-1 பகுதியை நோக்கிய தனது பயணத்தின் இறுதிகட்டத்தில் ஆதித்யா விண்கலம் உள்ளது. தற்போதைய நிலவரப்படி, ஆதித்யா L1 விண்கலம் நாளை மாலை L1 புள்ளியை சென்றடையும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர். ஜனவரி 6-ம் தேதி மாலை 4 மணிக்கு L1 சுற்றுப்பாதையில் ஆதித்யா விண்கலம் செலுத்தப்படவுள்ளது. அதன்பிறகு, ஆதித்யா விண்கலம் எல்-1 பகுதியை மையமாக கொண்ட சூரிய ஒளிவட்டப் பாதையில் (Halo Orbit) நிலைநிறுத்தப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.
விவசாயிகளிடம் இருந்து துவரம் பருப்பு நேரடி கொள்முதல்: புதிய இணையதளம் தொடக்கம்!
எல்1 புள்ளியை விண்கலம் சென்றடைவது சவாலான பணி என்பதால் இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அடுத்த 5 ஆண்டுகளுக்கு சுற்றுவட்டப்பாதையில் சுற்றியபடி சூரியன் குறித்து ஆதித்யா ஆய்வு மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே Lagrange point எனப்படும் ஐந்து புள்ளிகள் உள்ளன. இந்த புள்ளிகளில் நிலவும் சமநிலை காரணமாக, இங்கு வைக்கப்படும் பொருள் சூரியனால் ஈர்க்கப்படாது. அந்த புள்ளிகளில் நிலைநிறுத்தப்படும் பொருட்களுக்கு சூரியனால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. அதன்படி, லேக்ரேஞ் புள்ளி 1 (எல்1)-இல், இஸ்ரோவின் ஆதித்யா எல்1 செயற்கைகோள் நிலைநிறுத்தப்படவுள்ளது.