இஸ்ரோவின் வரலாற்று சாதனை.. ஆதித்யா-எல்1 வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த தலைவர்கள் - யார் யார் தெரியுமா?
சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராயும் இஸ்ரோவின் ஆதித்யா-எல்1 விண்கலத்தின் வெற்றிக்கு பிரதமர் மோடி முதல் பிற அரசியல் தலைவர்கள் வரை பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராய்வதற்கான ஆதித்யா-எல்1 விண்கலம், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி-சி57 ராக்கெட் மூலம் இன்று காலை 11.50 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
தொடர்ந்து இந்த நிகழ்வை இஸ்ரோ விஞ்ஞானிகள் கூர்ந்து கவனித்து வருகின்றனர். அதன்பின்னர் விண்கலன் 125 நாட்கள் பயணம் செய்து இலக்கை அடையும். பூமியில் இருந்து சுமார் 15 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ள ‘லாக்ராஞ்சியன் பாயின்ட் ஒன்’ எனும் பகுதியில் இந்த விண்கலம் நிலைநிறுத்தப்பட உள்ளது.
அங்கு இருந்தபடி சூரியனின் வெளிப்புறப் பகுதியின் வெப்பச் சூழல், கதிர்வீச்சு, காந்தப்புலம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்த ஆய்வுகளை ஆதித்யா மேற்கொள்ளும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு இந்திய தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில், சந்திரயான்-3 வெற்றிக்குப் பிறகு, இந்தியா தனது விண்வெளிப் பயணத்தைத் தொடர்கிறது. இந்தியாவின் முதல் சோலார் மிஷன், ஆதித்யா -L1 இன் வெற்றிகரமான ஏவுதலுக்காக நமது விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு வாழ்த்துக்கள். முழு மனிதகுலத்தின் நலனுக்காக பிரபஞ்சத்தைப் பற்றிய சிறந்த புரிதலை வளர்ப்பதற்காக நமது அயராத அறிவியல் முயற்சிகள் தொடரும்” என்று பதிவிட்டுள்ளார்.
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டுள்ள பதிவில், "வாழ்த்துக்கள், இஸ்ரோ. அறிவியல் அறிவைப் பின்தொடர்வதில் ஒரு வரலாற்று சாதனை! சூரியனை ஆய்வு செய்வதற்கான தனது முதல் விண்வெளி பயணத்தை இஸ்ரோ வெற்றிகரமாக தொடங்கியுள்ளது. ஆதித்யா எல்1 இந்த அற்புதமான முயற்சி, நமது அருகில் உள்ள நட்சத்திரத்தின் ரகசியங்களைத் திறக்க உறுதியளிக்கிறது. உங்கள் அர்ப்பணிப்பு மற்றும் நிபுணத்துவம் எங்கள் அனைவருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கிறது” என்று கூறினார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “ இஸ்ரோவில் உள்ள எங்களது விஞ்ஞானிகள், விண்வெளி பொறியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கடினமாக உழைக்கும் பணியாளர்களுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். இந்த வரலாற்று சாதனைக்காக நமது பழம்பெரும் விஞ்ஞானிகள் மற்றும் எண்ணற்ற ஆராய்ச்சியாளர்களின் தொலைநோக்கு பார்வை, புத்தி கூர்மை மற்றும் தீவிர அர்ப்பணிப்புக்கு எங்களின் அஞ்சலி” என்று கூறினார்.
மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், “இந்தியாவின் முதல் சோலார் மிஷனை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதற்காக இஸ்ரோ குழுவிற்கு பாராட்டுக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், “ஆதித்யா-எல்1 இன் இன்றைய ஏவுதல் இஸ்ரோ மற்றும் இந்தியாவுக்கான மற்றொரு மகத்தான சாதனை” என்று இஸ்ரோவை பாராட்டியுள்ளார்.
குட் நியூஸ்.. எஃப்டிக்கு 8%க்கும் அதிகமாக வட்டியை உயர்த்திய 3 வங்கிகள்.. என்னென்ன தெரியுமா.?