ஆதித்யா எல்1 விண்கலம் அறிவியல் தரவுகளை சேகரிக்கத் தொடங்கியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சூரியனை ஆராய்ச்சி செய்யும் ரூ.424 கோடி மதிப்பிலான ஆதித்யா எல்1 செயற்கைகோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ விண்ணுக்கு அனுப்பியுள்ளது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையே Lagrange point எனப்படும் ஐந்து புள்ளிகள் உள்ளன. இந்த புள்ளிகளில் நிலவும் சமநிலை காரணமாக, இங்கு வைக்கப்படும் பொருள் சூரியனால் ஈர்க்கப்படாது. அந்த புள்ளிகளில் நிலைநிறுத்தப்படும் பொருட்களுக்கு சூரியனால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. அதன்படி, லேக்ரேஞ் புள்ளி 1 (எல்1)-இல், இஸ்ரோவின் ஆதித்யா எல்1 செயற்கைகோள் நிலைநிறுத்தப்படவுள்ளது.
அந்த வகையில், ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்றுவட்டப் பாதை இதுவை 4 முறை உயர்த்தப்பட்டுள்ளது. தற்போதைய புதிய சுற்றுவட்டப் பாதையின் உயரம் 256கி.மீ. X 1,21, 973 கி.மீ. ஆகும். அடுத்த சுற்றுவட்ட பாதை உயர்வு நடவடிக்கை வருகிற 19ஆம் தேதி அதிகாலை 2 மணியளவில் நடைபெறும் எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதன்போது, புவியின் ஈர்ப்பு விசையில் இருந்து லேக்ரேஞ் புள்ளியை நோக்கி விண்கலம் பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஆதித்யா எல்1 விண்கலம் அறிவியல் தரவுகளை சேகரிக்கத் தொடங்கியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. பூமியைச் சுற்றியுள்ள துகள்களின் நடத்தையை ஆய்வு செய்ய விஞ்ஞானிகளுக்கு இந்த தரவுகள் உதவும் எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இஸ்ரோ தனது எக்ஸ் பக்கத்தில், “STEPS கருவியின் சென்சார்கள் பூமியில் இருந்து 50,000 கிமீ தொலைவில் உள்ள அதிவெப்ப மற்றும் ஆற்றல்மிக்க அயனிகள் மற்றும் எலக்ட்ரான்களை அளவிடத் தொடங்கியுள்ளன. இந்தத் தரவு விஞ்ஞானிகள் பூமியைச் சுற்றியுள்ள துகள்களின் நடத்தையை ஆய்வு செய்ய உதவுகிறது.” என பதிவிட்டுள்ளது.
ஆதித்யா எல்1 செயற்கைகோள் மொத்தம் 7 பேலோடுகளை சுமந்து சென்றுள்ளது. இதில் 4 பேலோடுகள் சூரியனை நேரடியாக ஆய்வு செய்யும். 3 பேலோடுகள் சூரியனின் வெளிப்பகுதி, துகள்கள், எல்-1 பகுதி உள்ளிட்டவற்றை ஆய்வு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், சுப்ரா தெர்மல் & எனர்ஜிடிக் பார்ட்டிகல் ஸ்பெக்ட்ரோமீட்டர் (STEPS) கருவியானது ASPEX பேலோடின் ஒரு பகுதியாகும். இந்த STEPS கருவிதான் அறிவியல் தரவுகளை தற்போது சேகரிக்கத் தொடங்கியுள்ளது. STEPS ஆனது ஆறு சென்சார்களை உள்ளடக்கியது, ஒவ்வொன்றும் வெவ்வேறு திசைகளில் கண்காணிக்கும் மற்றும் 20 keV/நியூக்ளியோன் முதல் 5 MeV/நியூக்ளியோன் வரையிலான அதிவெப்ப மற்றும் ஆற்றல் அயனிகளை அளவிடுகிறது.
இந்த அளவீடுகள் குறைந்த மற்றும் உயர் ஆற்றல் துகள் நிறமாலைகளைப் பயன்படுத்தி நடத்தப்படுகின்றன. பூமியின் சுற்றுப்பாதைகளில் சேகரிக்கப்படும் தரவு, குறிப்பாக பூமியின் காந்தப்புலத்தின்போது, பூமியைச் சுற்றியுள்ள துகள்களின் நடத்தையை பகுப்பாய்வு செய்ய விஞ்ஞானிகளுக்கு இது உதவுகிறது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
கடந்த 10ஆம் தேதி பூமியில் இருந்து 50,000 கிமீ தொலைவில் STEPS செயல்படுத்தப்பட்டது. இந்த தூரம் பூமியின் ஆரத்தை விட 8 மடங்கு அதிகமாகும். அகமதாபாத்தில் உள்ள விண்வெளி பயன்பாட்டு மையத்தின் ஆதரவுடன் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தால் STEPS உருவாக்கப்பட்டது.
