Adiadayanas order to expire in 2 days
‘எனக்கு சிறப்பு வசதிகள் ஏதும் வேண்டாம், தரையில் கூட உட்கார்ந்து கொள்வேன்’ என்று உ.பி. முதல்வர் ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு 2 நாட்கள் கூட முடியவில்லை. அதற்குள் மீண்டும் சிறப்பு வசதிகள் அவருக்காக அரங்கேறிவிட்டன.
அலகாபாத்தில் ஸ்வரூபா ராணி நேரு மருத்துவமனை உள்ளது. இங்கு நேற்று முன் தினம் முதல்வர் ஆதித்யநாத் வருகை புரிந்து, மருத்துவமனையின் நிர்வாகம், சிகிச்சையின் தரம் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார். நோயாளிகளிடமும் நலம் விசாரித்தார்.
இவர் வருகையை முன்பே தெரிந்து கொண்ட மருத்துவமனை அதிகாரிகள் நோயாளிகள் இருக்கும் வார்டுகளில் அவசரம் அவசரமாக 20 ஏ.சி. மெஷின்களைவாடகைக்கு வாங்கி வந்து பொருத்தினர்.
இதனால், முதல்வர் ஆதித்யநாத் வந்து செல்லும் வரை நோயாளிகளுக்கு ‘குளு, குளு’ என காற்று வந்தது, கொளுத்தும் வெயிலுக்கு குளுகுளு காற்று தினமும் இருக்கும் என நோயாளிகள் மகிழ்ச்சியில் இருந்தனர்.
ஆனால், ஆதித்யநாத் வந்து சென்றபின், அதிகாரிகள் வழக்கம் போல் ஏ.சி. மெஷின்களை கழற்றிச் சென்ற போது, நோயாளிகள் அதிர்ச்சியுற்றனர். முதல்வருக்காகத்தான் இந்த வசதியா, எங்களுக்கு இல்லையா? என நொந்துகொண்டனர்.
இது குறித்து மருத்துவமனையின் டீன் கருணாகர் திவேதியிடம் இது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறுகையில், “ மருத்துவமனையில் 80 ஏ.சி.கள் வரை இருக்கின்றன. அவரை அந்தநந்த வார்டுகளில்பொருத்தப்பட்டுள்ளன.
ஆனால், எலும்புமுறிவு சிகிச்சைப்பிரிவை பார்வையிட முதல்வர் ஆதித்யநாத் வருகை தர இருந்தார். அந்த வார்டில் ஏ.சி. இல்லை. மேலும், வெயிலும் கடுமையாக இருந்தது. இதனால், வாடகைக்காக ஏ.சி.எந்திரங்களை பொருத்தினோம். ஆனால், நோயாளிகள் சொல்வதுபோல் 20 ஏ.சி.க்கள்பொருத்தவில்லை’’ என்றார்.
தான் செல்லும் இடங்களில் சிறப்பு வசதிகள் செய்ய வேண்டாம் என்று ஆதித்யநாத்அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு 2 நாட்கள் கூட முடியவில்லை, அதற்குள் மீண்டும் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு இருக்கின்றன.
இதேபோன்று, வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் ஒருவர் வீட்டுக்கு ஆதித்யநாத்செல்லும் முன், அந்த வீட்டில் சோபாசெட்,ஏ.சி., தரைவிரிப்பு, திரைசேலை என அறையை ஆடம்பரமாக மாற்றினர்.
அவர் வந்து சென்ற சில நிமிடங்களில் அனைத்தையும் அள்ளிச்சென்றனர். இது பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. அதற்குள் மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
